Kathir News
Begin typing your search above and press return to search.

சிதிலமடைந்த விமான ஓடுபாதை மூலம் சூடானில் நள்ளிரவில் 121 இந்தியர்கள் துணிச்சலாக மீட்பு!

சிதிலமடைந்த விமான ஓடுபாதை மூலம் சூடானில் நள்ளிரவில் 121 இந்தியர்களை துணிச்சலாக மீட்டுள்ளனர்.

சிதிலமடைந்த விமான ஓடுபாதை மூலம் சூடானில் நள்ளிரவில் 121 இந்தியர்கள் துணிச்சலாக மீட்பு!

KarthigaBy : Karthiga

  |  30 April 2023 1:45 PM GMT

ஆப்பிரிக்க நாடான சூடானில் தத்தளித்து வருகிற 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு 'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை அறிவித்தது . அந்த நாட்டில் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக சூடான் துறைமுக நகரில் போர்க்கப்பல்களையும் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் போர் விமானங்களையும் இந்தியா நிறுத்தியுள்ளது.


இந்த நிலையில் அங்கு ஒரு துணிச்சலான நடவடிக்கையின் மூலம் இந்திய விமானப்படையின் சி -130 கனரக விமான மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் தலைநகர் கார்டூமுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடி சயீத்னாவில் உள்ள ஒரு சிறிய விமான ஓடுபாதையில் இருந்து 121 பேரை நள்ளிரவில் மீட்டுள்ளதாக தெரியவந்தது. இது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது :-


இந்த மீட்பு நடவடிக்கையானது 27- ஆம் தேதி நள்ளிரவு சமயத்தில் நடைபெற்றது. இதில்ஒரு கர்ப்பிணியும் அடங்குவார். இவர்கள் அனைவருமே போர்ட் சூடான் நகருக்கு வருவதற்கு எந்த வழி வகையும் இல்லாதவர்கள் ஆவார்கள் . அந்த வகையில் 121 இந்தியர்கள் மீட்கப்பட துணை நின்ற வாடி சயீத்னா என்ற இடத்தில் உள்ள சிறிய விமான ஓடு பாதை சிதைந்து போன மேற்பரப்பை கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கு வழி காட்டுகிற விளக்குகள் கூட கிடையாது. விமான ஓடுபாதையில் தடைகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு 'எலக்ட்ரோ ஆப்டிகல்ஸ் ' மற்றும் 'இன்ஃப்ராரெட்' சென்சார்களை பயன்படுத்தி உள்ளனர்.


இரவு நேரத்தில் பார்ப்பதற்கான பிரத்யேக கண்ணாடிகளை பயன்படுத்தி தந்திர உபாய அணுகுமுறைகளை பின்பற்றினர் . அங்கு விமானம் தரையிறங்கிய பின்னரும் அதன் எஞ்சின்கள் தொடர்ந்து இயங்க வைக்கப்பட்டன . விமானப்படை கமாண்டோக்கள் எட்டு பேர் மீட்கப்பட்டவர்களையும் அவர்களது உடைமைகளையும் விமானத்துக்குள் ஏற்றினார். விமானம் அங்கு தரையிறங்கியது முதல் ஜெட்டாவுக்கு மீண்டும் புறப்பட்டது வரையிலும் இரவு நேரத்தில் பார்ப்பதற்கான பிரத்யேக கண்ணாடிகளை பயன்படுத்தினர்.


இந்த மீட்பு நடவடிக்கை காபூலில் நடத்தப்பட்டதை போலவே மிகுந்த துணிச்சல் மற்றும் குறைபாடற்ற செயல்பாட்டுக்காக இந்திய விமானப்படை வரலாற்றில் இடம் பிடிக்கும் .இவ்வாறு அவர்கள் கூறினார். 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய போது அங்கிருந்த இந்தியர்களை இதே போன்றுதான் துணிச்சலான நடவடிக்கை மூலம் விமானப்படையினர் போர் விமானம் மூலம் மீட்டு வந்தது நினைவு கூரத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News