125 நாட்களில் ஒன்பது லட்சம் கோடி திட்டங்கள் தொடக்கம் மோடி அரசின் சாதனை
எப்போதும் இல்லாத வேகத்தில் எனது அரசு இயங்கி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
By : Karthiga
டெல்லியில் ஒரு ஆங்கில சேனல் நடத்திய நிகழ்ச்சி நடந்தது அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது :-
இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரே அரசை தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்கள் தேர்வு செய்துள்ளனர். நிலையான அரசை விரும்புவதாக இதன் மூலம் மக்கள் உணர்த்தியுள்ளனர். சமீபத்தில் நடந்த அரியானா சட்டசபை தேர்தலின் முடிவுகளும் நிலைத்தன்மையை மக்கள் விரும்புவதை மீண்டும் உறுதி செய்துள்ளது. மூன்றாவது ஆட்சி காலத்தில் எனது அரசு முன் எப்போதும் இல்லாத வேகத்தில் இயங்கி வருகிறது. புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வேகத்தை பார்த்து தரம் மதிப்பீட்டு அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி பற்றிய கணிப்பை மாற்றி அமைத்துள்ளன.
கடந்த 125 நாட்களில் ஒன்பது லட்சம் கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எட்டு புதிய விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. இளைஞர்களுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி மதிப்புள்ள திட்ட தொகுப்பு கையெழுத்து இடப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூபாய் 21,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. 70 வயதை தாண்டிய அனைத்து மூத்த குடிமக்களும் ரூபாய் 5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். பங்குச்சந்தை ஆறு சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியில் உள்ளது. பல்வேறு துறைகளில் சர்வதேச நிகழ்ச்சிகளை இந்தியா நடத்தியுள்ளது. இவை வெறும் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல. நம்பிக்கையின் பட்டியல்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற இந்தியா உறுதி பூண்டுள்ளது. பல்வேறு போர்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்தியிலும் உலகத்துக்கு நம்பிக்கையின் ஆதாரமாக இந்தியா மாறி உள்ளது .சிக்கலான நேரத்தில் இந்தியாவை உலக நாடுகள் நண்பனாக பார்க்கின்றன. அதன்படி கொரோனா காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. இந்தியா முன்னேறினால் உலக நாடுகள் பொறாமையாகப் பார்ப்பதில்லை. மகிழ்ச்சி அடைகின்றன. ஏனென்றால் இந்தியாவின் முன்னேற்றம் உலகத்துக்கு நன்மை பயக்கும் என்று அதை கருதுகின்றன .இந்தியாவில் நான்காவது தொழில் புரட்சி நடந்து வருகிறது .நாம் இனிமேல் கஷ்டப்பட்டு இருக்க வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.