ஜி.எஸ்.டி. யால் நஷ்டம் என்று கண்ணீர் விட்ட பார்லே-ஜி பிஸ்கெட் நிறுவனம் விற்பனையில் மைல்கல்லை எட்டிய அதிசயம்.!
ஜி.எஸ்.டி. யால் நஷ்டம் என்று கண்ணீர் விட்ட பார்லே-ஜி பிஸ்கெட் நிறுவனம் விற்பனையில் மைல்கல்லை எட்டிய அதிசயம்.!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், சாமானியனின் பிஸ்கெட் என்று பல வருடங்களாக அறியப்படும் பார்லே-ஜி இந்த கால கட்டத்தில் அதிகமாக விற்பனையாகி மைல்கல்லை எட்டிய செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 80 வருடங்களில் அதிகபட்சமாக கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் பார்லே- ஜி விற்றுத் தீர்ந்திருக்கிறது. விலை குறைவு என்ற காரணத்தால் சாமானியர்கள் ஊரடங்கு காலத்தில் வாங்கி சேமித்து வைத்ததாலும், மத்திய மாநில அரசு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மக்கள் நிவாரண பணிகளுக்காக அதிக எண்ணிக்கையில் வாங்கியதாலும் பார்லே-ஜி பிஸ்கெட் விற்பனை அதிகரித்துள்ளதாக பார்லி நிறுவன அதிகாரி மயங்க் ஷா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
"இந்த காலகட்டத்தில் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளோம். இதனால் பார்லே நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 4.5 முதல் 5% வரை அதிகரித்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார். அவர், பார்லே நிறுவனத்தில் தான் பணி புரிந்து வரும் 20 ஆண்டுகளில் இத்தகைய செயல்திறனைத் கண்டதில்லை என்று கூறியதோடு கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச வளர்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பார்லே-ஜி இந்தியர்கள் பலருக்கு பிடித்த தின்பண்டமாக இருப்பதால் கஷ்டமான காலகட்டத்தில் அதிகம் உண்ணப்பட்டுள்ளது என்றும், சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்ட காலகட்டங்களிலும் பார்லே-ஜி அதிகமாக விற்றதாகவும் கூறினார்.
அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதும் மக்கள் பார்லே-ஜியை நம்பி வாங்க காரணமாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் நிவாரண உதவியில் தங்கள் பங்காக 3 கோடி பார்லே-ஜி பிஸ்கெட் பாக்கெட்டுகளை பார்லே நிறுவனம் தானமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை அரசுத் தரப்பில் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விநியோகம் ஆகிய நிலைகளில் பார்லே நிறுவனம் சந்தித்த பிரச்சினைகளைத் தீர்க்க உதவியதாக அந்நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.
ஊரடங்கு காலகட்டத்தில் பிஸ்கட் நிறுவனங்களின் வளர்ச்சியில் பார்லே-ஜி நிறுவனம் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளதாக மயங்க் ஷா தெரிவித்துள்ளார். இதே மயங்க் ஷா கடந்த ஆண்டு, "2017ல் ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து பிரபலமான பார்லே நிறுவன தயாரிப்புகளான பார்லே-ஜி பிஸ்கட் போன்றவற்றின் விற்பனை பெருமளவில் சரிந்து விட்டது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The Wire இணைய இதழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவால் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்றும் அதனால், 8,000 முதல் 10,000 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் ஷா கூறி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மோடி அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் மேல் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போதோ அதே மோடி அரசு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் தகுந்த முடிவு எடுத்ததால் அதே பார்லே நிறுவனம் வளர்ச்சியையும் லாபத்தையும் பெற்றிருக்கிறது.
https://www.indiantelevision.com/mam/marketing/mam/how-parle-g-tackled-distribution-challenges-during-lockdown-200522
https://www.thehindu.com/business/Industry/parle-g-logs-record-sales-during-coronavirus-lockdown/article31792506.ece