சீன அரசிடமிருந்து விலக முயற்சிக்கும் அலிபாபா, டிக் டாக் நிறுவனங்கள் - கொரோனா பெருந்தொற்று எதிரொலி.!
சீன அரசிடமிருந்து விலக முயற்சிக்கும் அலிபாபா, டிக் டாக் நிறுவனங்கள் - கொரோனா பெருந்தொற்று எதிரொலி.!

வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறுவதை எப்படித் தடுப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் சீனாவுக்கு மேலும் ஒரு பிரச்சினை உருவெடுத்துள்ளது.
உலகளாவிய நிறுவனங்கள் மட்டுமல்ல அலிபாபா, டிக் டாக் போன்ற சீன நிறுவனங்களும் சீனாவைத் தாண்டி யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலால் அனைத்து நாட்டு மக்களும் சீனாவின் மேல் வெறுப்பில் இருக்கும் நிலையில், டிக் டாக் தன்னை ஒரு உலகளாவிய நிறுவனமாகக் காட்டிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கையில், அலிபாபாவோ நன்கொடைகள், மருத்துவப் பொருட்களை இலவசமாக அனுப்பி வைத்தல் என்று கைகூசாமல் செலவழித்து பிற நாட்டு நற்பெயரை சம்பாதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இல்லையென்றால் வியாபாரமே செய்ய முடியாது என்ற நிலை இருப்பதால், சீன நிறுவனங்கள் அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவை. இந்த மாதிரி தொடர்பு உள்ள Huawei, டிக் டாக், அலிபாபா போன்ற நிறுவனங்களை தங்களது நாட்டில் செயல்பட விடுவது பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று உலக நாடுகள் உணர்ந்துள்ளன.
ஆரம்ப காலத்திலேயே டிக் டாக் அபாயகரமானது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கைப்பாவையாக டிக் டாக் சீனாவை விமர்சிக்கும் பதிவுகளை சுவடில்லாமல் அழித்ததன் மூலம் உண்மை என்று நிரூபணமாகிவிட்டது.
தற்போது சீனா வேண்டுமென்றே கூட வைரஸை பரப்பி இருக்கலாம், தெரிந்தும் தெரியாதது போல் இருக்கலாம், எப்படியானாலும் இந்த விஷயத்தில் சீன அரசின் செயல்பாடு சந்தேகத்திற்குரியது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும் நிலையில் டிக் டாக் செயலி தன்னை சீன அரசிடமிருந்து விலக்கி வைக்க முயற்சிக்கிறது.
'சீன செயலி' என்ற அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் கெவின் மேயரை டிக் டாக் செயலி மற்றும் அதன் மூல நிறுவனமான ByteDanceன் தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தியுள்ளது. இதன் மூலம் ஒரு அமெரிக்கர் நிறுவனத்தை நிர்வகிப்பதால் தாங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர்கள் அல்ல என்று உலகிற்கு காட்ட முயற்சிக்கிறது.
டிக் டாக் மட்டுமல்ல மற்றொரு சீன நிறுவனமான அலிபாபாவும் ஜி ஜின்பிங் அரசிடமிருந்து விலக முயற்சிக்கிறது. அலிபாபா நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான உலகில் பணக்கார கம்யூனிஸ்டுகளில் முதலிடத்தில் இருக்கும் ஜாக் மா, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி கேட்டால் தனது வணிக நிறுவனங்கள் அனைத்தையும் சந்தோஷமாக கொடுத்து விடுவதாக இவர் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சீன அரசின் மேலிருந்த நல்லெண்ணமும் நம்பிக்கையும் அதல பாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில், அலிபாபா நிறுவனம் இந்தியா, லத்தின் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா என்று உலகின் அனைத்து பகுதிகளுக்கும் லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள மருத்துவப் பொருட்களை நிவாரண உதவியாக இலவசமாக அளித்து தனது மேல் எஞ்சியிருக்கும் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் உயர்த்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஜாக் மாவின் அறக்கட்டளை முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு தானமளித்துக் கொண்டு இருக்கிறது.
லட்சக்கணக்கான முகக் கவசங்களை பல நாடுகளுக்கு அனுப்பியதோடு, நியூயார்க் நகருக்கு 1000 வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்துள்ளார் ஜாக் மா. கொரோனா வைரஸ் தொற்றின் தொடக்க காலத்தில், ஜனவரி மாதத்திலேயே, வைரஸூக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 14 லட்சம் டாலர் ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.
இந்த மாதிரி உதவியெல்லாம் சீன நிறுவனங்கள் சீனாவுக்குள்ளேயே செய்வது தான் வழக்கம். எனவே ஜாக் மாவின் செயல்பாடுகள் வழக்கத்திற்கு மாறானவையாக தெரிகின்றன.
இதைப் பற்றி ஆய்வு செய்யும் எட்வர்ட் கன்னிங்காம் என்ற ஆய்வாளர் பொருளாதாரம் கொழித்ததால் அதன் மூலம் பயனடைந்தவர்கள் சீன அமைப்புகளிலோ அல்லது சீன ஆதிக்கத்தை மேம்படுத்தும் வகையில் சீன குடும்பங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலோ முதலீடு செய்வது தான் வழக்கம் என்று கூறியுள்ளார். எனவே ஜாக் மாவின் செயல்பாடு ஆச்சரியமூட்டுவதாக அமைந்துள்ளது.
ஜாக் மா ஏன் திடீரென்று பிற நாடுகளுக்கு உதவி செய்ய விழைகிறார்? சீன அரசு உலகையே ஒரு பெருந்தொற்றில் தள்ளிவிட்டு விட்ட நிலையில் தனது நிறுவனம் உதவி செய்ய முயல்வதாக அவர் காட்ட விரும்புவதாகவே தெரிகிறது.
இத்தகைய செயல்களின் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து தங்களை விலக்கிக் காட்ட முயற்சிக்கின்றன இந்த நிறுவனங்கள். முகக் கவசங்களை அனுப்பி நல்ல பெயர் வாங்க நினைத்த சீன அரசின் முயற்சியில் மண் விழுந்து விட்டதால், அலிபாபா நிறுவனம் அதேபோன்ற, ஆனால் சீன அரசிடம் இருந்து விலகி தனித்திருப்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று பரவலில் சீனாவின் செயல்பாடுகள் சீன நிறுவனங்களுக்கும் சீன கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி விட்டதாகத் தெரிகிறது. Huawei தொலைத்தொடர்பு நிறுவனம் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி உலக நாடுகளில் தடம் பதித்த நிலையில் தற்போது அனைவராலும் ஒதுக்கப்படுகிறது.
தங்களது நிலையும் Huawei நிறுவனத்தைப் போல் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் டிக் டாக் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் சீனா அரசிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.
மேற்கண்ட பதிவு tfipost.com ல் வெளியான ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்