குளியல் காட்சியை படம்பிடித்து மிரட்டியதால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - வேலூரில் பயங்கரம்!
குளியல் காட்சியை படம்பிடித்து மிரட்டியதால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - வேலூரில் பயங்கரம்!

வேலூர் பாகாயம் அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒர் தொலைபேசி அழைப்பு வந்ததில் ஒருவன் "இவரது சித்தப்பா வாட்ஸ் அப் நம்பருக்கு தான் ஒரு வீடியோவை அனுப்பியுள்ளதாகவும், அதைப் பார்த்து விட்டு பேசுமாறும் சொல்லி" இணைப்பைத் துண்டித்துள்ளான்.
வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டின் தென்னை ஓலையால் மறைக்கப்பட்ட குளியலறையில் தான் குளிப்பதை யாரோ செல்போன் காமிரா மூலம் படம் பிடித்திருப்பதைக் கண்டு மிரண்டு போனார் மாணவி.
மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட அந்த கும்பல், இந்த வீடியோவைத் தர வேண்டும் என்றால், தாங்கள் சொல்லும் இடத்துக்கு வருமாறு கூறி மிரட்டியுள்ளது. பதற்றத்தில் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற மாணவியிடம் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.
அங்கிருந்து தப்பி வந்த மாணவிக்கு மீண்டும் போன் செய்து மிரட்டிய அந்த கும்பல், 5 ஆயிரம் ரூபாய் பணம் தராவிட்டால் வீடியோவை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பிவிடப் போவதாக பிளாக் மெயில் செய்துள்ளது.
இந்த கொடுமையை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க இயலாமல் தவித்த மாணவிக்கு, வீடியோ குறித்து விவரம் அறிந்த வேறு சில இளைஞர்களும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் வேதனையடைந்த சிறுமி, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் துடித்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பலத்த தீக்காயங்களுடன் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையினரிடம் மரண வாக்கு மூலம் அளித்தார். அதன் அடிப்படையில் பாகாயம் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், தாமஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.