சீனா ஊடுருவவில்லை என பிரதமர் கூறவில்லை - ஊடுருவல் முயற்சியை தடுத்து வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர் என்றே பேசினார்! - பிரதமர் அலுவலகம் விளக்கம்!
சீனா ஊடுருவவில்லை என பிரதமர் கூறவில்லை - ஊடுருவல் முயற்சியை தடுத்து வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர் என்றே பேசினார்! - பிரதமர் அலுவலகம் விளக்கம்!

இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா தந்த பதிலடியில் சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின. லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, நம் நிலத்தின் ஒரு அங்குலத்தின் மீதும் யாருடைய கண் பார்வையும் கூட விழ முடியாத திறனை நாம் கொண்டிருக்கிறோம். இந்திய ஆயுதப் படைகள் ஒரே நேரத்தில் பல்வேறு பிராந்தியங்களுக்கு செல்லும் திறனை கொண்டுள்ளன.
சீனா எல்லையில் ஊடுருவவில்லை அவர்களால் எந்த ஒரு இந்திய முகாமும் கைப்பற்றப்படவில்லை 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். நமது பாதுகாப்பு படைகள் நமது எல்லையை பாதுகாக்கும் முழு திறனுடன் உள்ளனர் என்பதை நான் உறுதி அளித்துக் கொள்கிறேன் என்று பேசியதாக தகவல் வெளியாகியது.
பிரதமர் மோடி பேசியது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், எல்லையில் சீனா ஊடுருவவில்லை என்றால் இந்திய வீரர்கள் எங்கு கொல்லப்பட்டனர்? ஏன் கொல்லப்பட்டனர் என கேள்வி எழுப்பினர்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் சீன அத்துமீறல் பற்றி பிரதமர் மோடி கூறியதை தவறாக திசை திருப்புகிறார்கள்.
சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முயறியடிக்கப்பட்டுள்ளது. ஊடுருவல் முயற்சியை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்து தடுத்தனர் என கூறினார் எல்லைக்கோட்டை தாண்டி உட்புக முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றே பிரதமர் மோடி பேசினார்.
சண்டைக்குப்பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்று தான் நரேந்திர மோடி பேசினார். சீனப்படைகள் ஊடுருவவில்லை என பிரதமர் கூறவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.