Kathir News
Begin typing your search above and press return to search.

யோகா - சமநிலை, கருணை, சமத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு அறிவியல் - குடியரசு துணைத்தலைவர்.!

யோகா - சமநிலை, கருணை, சமத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு அறிவியல் - குடியரசு துணைத்தலைவர்.!

யோகா - சமநிலை, கருணை, சமத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு அறிவியல்  - குடியரசு துணைத்தலைவர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jun 2020 11:00 AM GMT

கொவிட்-19 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் நடத்தும் பாட நிகழ்ச்சிகளில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த முறையான யோகா பயிற்சியையும் ஒரு படிப்பாகச் சேர்க்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஸ்பிக் மேகாய் ஏற்பாடு செய்திருந்த டிஜிடல் ' யோகா மற்றும் தியான முகாம்' நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பேரின் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றியுள்ள யோகா, உலகத்துக்கு இந்தியா வழங்கிய தனித்துவமான கொடை என்று கூறினார்.

குழந்தைகளுக்கு யோகாவை சிறிய வயதிலேயே அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ''குழந்தைகளுக்கு 13 யோகா பயிற்சிகள் மற்றும் தோற்றங்களை 'யுனிசெப் கிட் பவர்' பட்டியலிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்'' என அவர் கூறினார்.

5000 ஆண்டு பழமையான யோகா பாரம்பரியம் வெறும் உடற்பயிற்சி அல்ல என்று குறிப்பிட்ட அவர், '' அது சமநிலை, கருணை, சமத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு அறிவியல்'' என்று கூறினார். தோரணைகள் , மூச்சுப்பயிற்சி, தியான உத்திகள் போன்ற யோகாவின் பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்து, மனித உடலிலும், மனதிலும் பல வழிகளில் ஆக்கபூர்வமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

யோகாவை ஆரோக்கியத்துக்கான தீர்வாக மாற்றும் மகத்தான வாய்ப்புகள் குறித்து கண்டறிவதற்கான பெருமளவிலான அறிவியல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய திரு. நாயுடு, யோகா ஒரு சிகிச்சை முறை என்று கூறியதுடன், யோக சிகிச்சை மிகவும் பிரசித்தி பெற்றது என்றார். பல நோய்களை குணப்படுத்துக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு என்பது அறிவியல் பூர்வமான பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கொவிட்-19 தொற்று மக்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், ''உலகமே தற்போது சவாலான காலகட்டத்தைச் சந்தித்து வருகிறது. இந்தத் தொற்று நம்மை வெற்றிகொள்ள நாம் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மிக வலிமையான போராட்டத்தை மேற்கொண்டு, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்யவேண்டும்'', என்று கூறினார்.

இந்தக் கொடிய தொற்று நமது வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள உயர் மன அழுத்தத்திற்கு யோகா சிறந்த தீர்வாக இருக்கமுடியும் என்று அவர் தெரிவித்தார். ''பெரிய அளவில் பாதிப்பு இராத, சிறந்த உயர் பலன் அளிக்கும் அணுகுமுறை கொண்ட யோகா காரணமாக, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் முன்னேற்றம் அடையும்., அதன் முழு ஆற்றலையும் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்'' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பெருந்தொற்று மட்டும் சுகாதார சிக்கல் இல்லை என்று குறிப்பிட்ட அவர், வாழ்வியல் முறையால் ஏற்படும் நோய்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக கூறினார். இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு நேரிட்ட இறப்புகளில் 63 சதவீதம் தொற்றா நோய்கள் மூலம் ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ''வாழ்வியல் நோய்களைத் தடுக்கவும், முறியடிக்கவும், யோகா வியப்பூட்டும் வகையிலான எளிமையான அதே சமயம் வலுவான கருவி'', என்று திரு. நாயுடு கூறினார்.

நவீன கால மன அழுத்தங்களிலிருந்து மீள முடியாமல் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரிப்பது பற்றி கவலை வெளியிட்ட அவர், இத்தகைய அனைத்து மரணங்களும் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டார். நவீன கால வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தம், தேவையற்ற ஆவல், பதற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காண யோகா உதவும் என்றார் அவர்.

இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகையின் பயன் குறித்து குறிப்பிட்ட அவர், ''நமது இளைஞர்கள் உடல் , மனம், உணர்வு ரீதியாக கட்டுக்கோப்புடனும், தகுதியுடனும் உள்ளனர் என்பதை உறுதி செய்ய நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்'', என்று வலியுறுத்தினார்.

''யோகா நிபுணர்களுக்கான தன்னார்வச் சான்றிதழ் திட்டம்'' போன்றவற்றைப் பாராட்டிய அவர், '' இந்தத் திட்டத்தின் மூலம், மேலும் அதிக யோகா தொழில்றை வல்லுநர்கள் சான்றளிக்கப்படுவார்கள், இதன் மூலம் யோகா பயிற்சி மேலும் அதிக அளவுக்கு பரவும்'' என்று கூறினார்.

உலகம் முழுவதும் கட்டுடல் தகுதி இயக்கங்களில் யோகா மிகப்பெரிய பயிற்சியாக மாறியுள்ளது என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், இதனை அப்படியே பராமரிக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும் என்றார். ''இந்தியாவின் பழமையான பாரம்பரியத்தில், யோகா தடையில்லாத பார்ம்பரியத்தைக் கொண்டது. இந்த விலை மதிப்பற்ற பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு நம் அனைவரையும் சார்ந்தது'' என்று அவர் கூறினார்.

இது போன்ற முகாம்கள், சரியான திசையில் செல்வதற்கான படிக்கல் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இளைஞர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் வருங்காலத்தில் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News