இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்தது - இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிவிப்பு.!
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்தது - இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிவிப்பு.!

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் வேலைவாய்ப்பின்மை உச்சத்தைத் தொட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நகர பகுதிகளில் கடந்த ஜூன் 21ம் தேதி அன்று 11.2 % ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 8.5% ஆக குறைந்துள்ளதாக CMIE தெரிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த விகிதம் 23.5% என்ற உச்ச நிலையில் இருந்த நிலையில் கொரோனா தொற்று சூழ்நிலையால் வேலையிழந்தவர்களுக்கு ஊரடங்கிலிருந்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு மத்தியில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு காரணமாக பல தொழில்களும் நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும் புலம்பெயர் தொழிலாளர்களின் விஷயத்தில் பெரும்பாலானோர் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியதும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்க ஒரு காரணமாகும்.
மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் கரீப் விதைப்பு பருவம் ஆகியவற்றால் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 8.75%ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் மே 3 அன்று 27.1% என்ற புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால் ஊரடங்கு விதிகளில் அளிக்கப்பட்ட தளர்வுகள் பல தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் மீண்டும் செயல்பட ஆரம்பித்த நிலையில் ஜூன் முதல் மாதத்தின் முதல் 3 வாரங்களில் 17.5%, 11.6% என்று குறைந்து தற்போது 8.5% ஆக ஊரடங்குக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.
நகரப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பின்மை குறைந்திருந்தாலும் ஊரடங்கு முன்னிருந்த விகிதமான 9%ஐ விட சற்று அதிகமாக 11.2% என்று இருப்பதாக CMIE கூறியுள்ளது. "இந்தியாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளால் கிராமப்புற வேலைவாய்ப்பு விகிதம் மிகப்பெரிய ஏற்றத்தை கண்டுள்ளது. இனி வரும் மாதங்களில் வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும்" என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியாஸ் கூறியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் மூலம் ₹ 50,000 கோடி நிதியில் மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.