சாத்தான் குளத்தில் காட்டப்பட்ட மனிதாபிமானமும், பரிவும் தென்காசி பக்கமும் காட்டப்பட வேண்டும் - கட்சிகளுக்கும், மீடியாக்களுக்கும் நடுநிலை சிந்தனையாளர்கள் வேண்டுகோள்.!
சாத்தான் குளத்தில் காட்டப்பட்ட மனிதாபிமானமும், பரிவும் தென்காசி பக்கமும் காட்டப்பட வேண்டும் - கட்சிகளுக்கும், மீடியாக்களுக்கும் நடுநிலை சிந்தனையாளர்கள் வேண்டுகோள்.!

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ், அவரது மகன் பிலிப்ஸ் ஆகியோர் போலீசாரால் சரமாரியாக தாக்கப்பட்டு பலியான விவகாரத்தில் தமிழக மக்கள் அனைவரும் இந்த செயலை செய்த போலீசாரின் வக்கிர குணத்தை கண்டித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள எவரும் இந்த அராஜக செயலை பாராட்டவில்லை. தவறு செய்த போலீசாருக்கு அதிக பட்சம் எவ்வளவு தண்டனை சட்டப்படி பெற்றுத்தர முடியுமோ அதை செய்ய வேண்டும் என்றே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பொது மக்களின் இந்த கண்ணோட்டம் உண்மையில் ஒரு மனிதாபிமான கண்ணோட்டமாகும். ஆனால் இந்த சாத்தான்குள சம்பவத்தை முன்வைத்து சில அரசியல் கட்சிகளும், பல மீடியாக்களும் செயல்படும் விதத்தை பார்த்தால் பலியான 2 பேரின் பிணங்களை வைத்து ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதாயமாக இந்த சம்பவங்களை கொண்டு செல்வது நன்றாக கண்ணுக்கு தெரிகிறது.
போலீசார் செய்த தவறுக்காகவும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் தமிழக அரசு ரூ. 20 லட்சத்தை ஜெயராஜ் குடும்பத்துக்கு நிவாரணமாக வழங்குகிறது. அதே சமயம் திமுக சார்பில் இந்த தொகுதியின் எம்.பி.யாக உள்ள கனிமொழியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ரூ.25 லட்சம் வழங்குகிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பமோ அரசு நிவாரணத்தை ஆரம்பத்தில் மறுத்து பிறகு பெற்றுள்ளனர். ஆனால் திமுக அளித்த பணத்தை ஆர்வத்துடன் பெற்றுக் கொள்கிறார்கள்.
மீடியாக்களும் திமுக அளித்த நிவாரணத்துக்கு அதிக பட்ச விளம்பர முன்னுரிமை அளித்ததுடன் ஒட்டு மொத்த போலீசாரையும் மிருகங்கள் போல வருணித்து போலீசாருக்கு எதிராக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மீடியாக்கள் என்ன சொல்கின்றனவோ அதைப் பார்த்து சோஷியல் மீடியாக்களும் ஒட்டு மொத்த போலீசாரையே வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் சுகாதாரப் பணியாளர்களைப் போலவே போலீசாரும் ஒரு பக்கம் தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்து வருகின்றனர், அவர்களில் நூற்றுக்கணக்கான போலீசார் கொரோனா நோயில் சிக்கியுள்ளனர். சில போலீஸ் அதிகாரிகள் இறந்தே போயுள்ளனர். இந்த நிலையிலும் கொரோனா பணிகள் மட்டுமல்லாமல், இதர திருட்டு, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள், சொத்து தொடர்பான தகராறுகள், பந்தோபஸ்து பணிகள் என எல்லா வேலைகளையும் தங்கள் தலையில் சுமந்து எந்த எதிர்ப்பும் சொல்லாமல் தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு சில போலீசார் செய்த சம்பவத்தை வைத்து ஒட்டு மொத்த போலீசாரை மட்டுமல்ல, தமிழக அரசு, மத்திய அரசு என அனைவரையும் தாக்கி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் , சில எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் பேசுவதை பார்த்தால் உண்மையில் இவர்கள் பலியான ஜெயராஜ் மற்றும் பிலிப்ஸ் இவர்களின் பின்னணியிலுள்ள சாதி , மதம் இவற்றைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த அனுதாபத்தை பயன்படுத்த முனைந்துள்ளது தெரிவதாக சில சமூக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சாத்தான்குள விவகாரத்தில் இந்த அளவுக்கு அக்கறை செலுத்தும் சில அரசியல் கட்சிகளும், மீடியாக்களும் தென்காசி குமரேசன் மரணத்தில் ஏன் தங்கள் பார்வையை செலுத்தவில்லை. கொலையான குமரேசன் 24 வாயது இளைஞன். ஆட்டோ ஓட்டுபவர், இவருடைய மரணத்துக்கு காரணமும் சில போலீசாரின் துன்புறுத்தலே காரணம் என கூறப்படுகிறது, அதுவும் இறந்த குமரேசனின் மர்ம ஸ்தானத்தில் போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படுகிறது. அதுவும் ஜெயராஜ், பிலிப்ஸ் தாக்கப்பட்ட காலத்தில்தான் அதே பாணியில் நடந்துள்ளது. ஆனால் அரசியல் கட்சிகளோ அல்லது மீடியோக்களோ வர்த்தகர்களான பிலிப்ஸ், ஜெயராஜ் மரணத்தில் காட்டிய மனிதாபிமான அக்கறையை இதில் காட்டவில்லை. ஜெயராஜ் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் கொடுத்த திமுகவின் மனிதாபிமான மனம் குமரேசன் குடும்பத்துக்கு 10 இலட்சம் கூட தர ஏன் முன்வரவில்லை. இதற்கு காரணம் என்ன ? குமரேசன் ஒரு வர்த்தகன் இல்லை என்பதா அல்லது வாக்குகளை ஒரு பக்கமாக கொண்டுபோய் குவிக்கும் சிறுபான்மை இனத்தில் அவன் பிறக்கவில்லை என்பதாலா ? இதுதான் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் உண்மையான மனிதாபிமானமா? என நடுநிலை சமூக சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் தமிழகத்தை பொறுத்த வரை ஒரு மோசமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி அதை மக்கள் மனதில் திணிக்கும் வகையில் கண்ணுக்கு தெரியாத சக்திகள் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த சக்திகள்தான் ஜல்லிக்கட்டு விவகாரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் போன்றவற்றில் தங்கள் கை வரிசையை காட்டின. சமீபத்தில் கூட கேரள வனப் பகுதியில் ஒரு யானை பழத்துக்குள் வெடிகுண்டு திணித்து கொல்லப்பட்ட வழக்கில் முதலில் இந்த சக்திகள்தான் இந்த விஷயத்தை ஆரம்பத்தில் மிகவும் பெரிதாக்கின. ஆனால் யானையை கொன்றவர்கள் இந்துக்கள் அல்ல அவர்கள் சிறுபான்மையினர் என்று தெரிந்ததும் விஷயத்தை சீக்கிரமாக முடித்துக் கொண்டனர். ஆனால் அதே கால கட்டத்தில் உத்தர பிரதேசத்தில் ஒரு பசுவுக்கு பழத்தில் வெடிமருந்து திணித்து ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்த இளைஞன் கொன்ற விவகாரத்தை இந்த சக்திகள் எதுவும் எதுவும் கண்டு கொள்ளவே இல்லை. இந்த சக்திகள்தான் இப்போதும் சாத்தான் குள விவகாரத்தில் வேதம் ஓதிக் கொண்டிருக்கின்றன, எனவே மக்கள் இந்த சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள மீடியாக்களிடமும், கட்சிகளிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நம்பிவிடக் கூடாது என நடுநிலை சிந்தனையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.