"ஹாங்காங் விவகாரத்தில் இங்கிலாந்து விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" - திமிரும் சீனா!
"ஹாங்காங் விவகாரத்தில் இங்கிலாந்து விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" - திமிரும் சீனா!

சீனா, சமீபத்தில் ஹாங்காங்கில் கொண்டு வந்த கடுமையான, புதிய "தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து" தப்பி ஓடும் ஹாங்காங்கர்களுக்கு இங்கிலாந்தில் வாழ்விடம் அல்லது குடியுரிமை வழங்கினால் "எல்லா விளைவுகளையும் இங்கிலாந்து தாங்க வேண்டியிருக்கும்" என்று சீனா எச்சரித்தது.
வியாழக்கிழமை (ஜூலை 2), பெய்ஜிங்கில் ஒரு வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "சீனா இதை கடுமையாக கண்டிக்கிறது, மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் உரிமை சீனாவுக்கு உள்ளது. பிரிட்டிஷ் தரப்பு இதன் அனைத்து விளைவுகளையும் தாங்கும்". என்று கூறினார்.
முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இருவரும் முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங்கில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 லட்சம் குடியிருப்பாளர்களுக்கும், பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு அந்தஸ்து (BNO ) உள்ளவர்களுக்கு, இங்கிலாந்தில் குடியேற உரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இங்கிலாந்திற்கான சீனாவின் தூதர் லியு சியாமிங், BNO வைத்திருப்பவர்களுக்கு வாழ்விடத்தை வழங்குவதற்கான இங்கிலாந்தின் எந்தவொரு நடவடிக்கையும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களை மீறுவதாக இருக்கும் என்றார். அவர் மேலும் "ஹாங்காங்கர்கள், பிரிட்டிஷ் பிரதேச குடிமக்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் சரி, பிரிட்டிஷ் தேசிய (வெளிநாட்டு) பாஸ்போர்ட்டை வைத்திருந்தாலும் சரி, ஹாங்காங்கில் வசிக்கும் அனைத்து சீனத் தோழர்களும் சீன நாட்டவர்கள்" என்றார்.
சீனத் தூதரகத்தின் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், லியு, "பிரிட்டிஷ் தரப்பு சம்பந்தப்பட்ட நடைமுறையில் ஒருதலைப்பட்சமாக மாற்றங்களைச் செய்தால், அது தன் சொந்த நிலைப்பாட்டையும்,உறுதிமொழிகளையும், சர்வதேச சட்டத்தையும் மீறும். இதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். ஹாங்காங்கின் மீது இங்கிலாந்துக்கு இறையாண்மை, அதிகார வரம்பு அல்லது 'மேற்பார்வை' உட்பட எந்த உரிமையும் இல்லை. "
இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலக நிரந்தர செயலாளர் சர் சைமன் மெக்டொனால்ட், லியுவை வரவழைத்து, சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டத்தை ஹாங்காங்கில் சுமத்தியது சீன-பிரிட்டிஷ் கூட்டு அறிவிப்பை மீறும் செயலாகும் எனத் தெரிவித்தார்.
பிப்ரவரி 2020 நிலவரப்படி, கிட்டத்தட்ட 350,000 BNO பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உள்ளனர். அவர்களில் ஹாங்காங்கில் சுமார் 2.9 மில்லியன் BNO-க்கள் இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.