Kathir News
Begin typing your search above and press return to search.

1800 ஆண்டுகள் பழமையான அரிகண்டகல்லுக்கு இப்படி ஒரு வரலாறா? மக்கள் வியப்பு!

1800 ஆண்டுகள் பழமையான அரிகண்டகல்லுக்கு இப்படி ஒரு வரலாறா? மக்கள் வியப்பு!
X

ShivaBy : Shiva

  |  11 July 2021 8:40 AM IST

பழனி அருகே செங்கழனியம்மன் கோவிலில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்ட கல் தொல்லியல் துறை ஆய்வாளர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கமநாயக்கன்புதூரில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்டகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அரிகண்டகல் செங்கழனி அம்மன் கோவிலை சேர்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் இது அருகில் இருக்கும் அழிந்துபோன மிகவும் பழமையான சிவன் கோவிலில் இருந்து காலப்போக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிகண்ட கல்லைப் பற்றி ஆய்வாளர் நந்திவர்மன் தெரிவிப்பது என்னவென்றால், "எதிரிநாட்டு மீது போர் தொடுக்கும் போது தன் நாட்டுப் படைகளுக்கு எதுவும் நேர்ந்து விடாமல் தங்களது படை வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும், நோய்வாய்ப்பட்டிருக்கும் அரசன் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காகவும் தனது தலையை வெட்டி கொற்றவைக்குப் பலிகொடுத்து உயிர்த்தியாகம் செய்யும் போர் வீரருக்கு அரிகண்ட சிற்பங்கள் செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் அக்காலத்தில் அரிகண்டம் கொடுப்பது ஒரு பெரிய விழாவாக நடத்தப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் இடையில் உடைவாளும் மார்பில் கவசம் தரித்து, போர் வீரன் உடையில் காட்சி அளித்து, கொற்றவைக்கு பூஜை செய்து, தனது ஒரு கையால் தலைமுடியை இழுத்துப் பிடித்துக் கொண்டு மறுகையால் கழுத்தை அறுத்துக் கொண்டு இறப்பது அரிகண்டம் எனவும், இதேபோல் தனது கை, கால், வயிறு என எட்டு உறுப்புகளை வெட்டிக் கொண்டு ஒன்பதாவதாக தலையை அறுத்து கொற்றவைக்குப் பலி கொடுத்து இறப்பது நவகண்டம் எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு பலி கொடுப்பவர்களுக்கு பூஜை செய்து அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக அரிகண்ட சிற்பங்கள் செய்து வழிபட்டு வந்துள்ளனர் என்று அவர் விளக்கம் அளித்தார். தற்போது பழனியில் கிடைத்திருக்கும் இந்த சிற்பம் 45 சென்டிமீட்டர் உயரமும் 30 சென்டிமீட்டர் அகலமாக கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் சிற்பங்களிடையே சிறிதாக இருக்கும் சிற்பம் இது என்று தெரியவந்துள்ளது. மேலும் இது கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பழனி பகுதியில் 1800 ஆண்டுகள் பழமையான அரிகண்டக்கல் கிடைத்துள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Source :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News