Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கா செல்லும் வாய்ப்பை தட்டிச்சென்ற அரசுப்பள்ளி மாணவி - ஏன் தெரியுமா?

சிறார் திரைப்படம் இயக்குதல் போட்டியில் முதலிடம் பிடித்து அமெரிக்கா செல்லும் வாய்ப்பை சின்னாளபட்டியை சேர்ந்த அரசு பள்ளி மாணவி பெற்றுள்ளார்.

அமெரிக்கா செல்லும் வாய்ப்பை தட்டிச்சென்ற அரசுப்பள்ளி மாணவி - ஏன் தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  10 April 2023 4:00 AM GMT

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கலைத் திருவிழா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசு பள்ளி மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிப்படுத்த நல்ல ஒரு களமாக கலை திருவிழா அமைந்தது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் .இதன் தொடர்ச்சியாக கல்வி சாரா மன்ற செயல்பாடுகளை அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம் இயக்குதல், வானவில் மன்றம் ,வினாடி - வினா தொடர்பாக பள்ளி அளவிலும் மற்றும் ஒன்றிய மாவட்ட மாநில அளவிலும் போட்டிகள் நடைபெற்றன.


இதில் சிறார் திரைப்படம் இயக்கும் போட்டியில் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகள் நடைபெற்றன. அதன்படி திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே குரும்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா என்ற மாணவி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானார். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அப்போது அந்த மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர் .மேலும் அவர்களுக்கு திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குவது தொடர்பாக ஆறு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த போட்டியில் கீர்த்தனா உட்பட 14 பேர் அடங்கிய குழு முதலிடத்தை பிடித்தது.


போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது . அதன்படி கீர்த்தனா உள்ளிட்ட 14 பேரும் அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை பெற்றனர். இவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகர் மற்றும் பல்வேறு இடங்களில் சுற்றி பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா செல்லும் மாணவி கீர்த்தனாவின் தந்தை மதனகோபால், தாய் ராஜேஸ்வரி ஆவர். மதனகோபால் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கீர்த்தனாவுக்கு புவனா என்ற அக்காவும் ஜீவானந்தம் என்ற தம்பியும் உள்ளனர். தேர்வு துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News