20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்த கோவில் நிலம் மீட்பு!
By : Yendhizhai Krishnan
காங்கேயம் அருகே கோவிலுக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த நிலத்தை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் சிறியார் பாளையம் பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலம் சென்னிமலை காங்கேயம் சாலையில் உள்ளது. இந்த கோவில் நிலத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக 19 பேர் கொண்ட ஒரு குழு ஆக்கிரமித்து வைத்துள்ளது. இது தொடர்பாக 2017ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை இணை ஆணையரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24ஆம் தேதி இந்த கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தை விட்டு காலி செய்யாமல் இருந்து வந்துள்ளனர். இதை அடுத்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான குழு நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு ஆக்கிரமிப்பாளர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றி அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் அந்த நிலத்தை கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட இந்த கோவில் நிலத்தின் மதிப்பு 20 கோடி ரூபாய் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 ஆண்டு காலமாக அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்போது கோவில் நிலம் மீட்கப்பட்டு கோவிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட இருக்கும் அனைத்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.