கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்துமாறு வங்கி ஒழுங்குமுறை (திருத்த) அவசரச் சட்டம், 2020-ஐ குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்தினார்
கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்துமாறு வங்கி ஒழுங்குமுறை (திருத்த) அவசரச் சட்டம், 2020-ஐ குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்தினார்

வங்கிகளில் பணம் சேமித்து வைத்துள்ளோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, வங்கி ஒழுங்குமுறை (திருத்த) அவசரச் சட்டம், 2020-ஐ குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்தினார்.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-ஐ கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்துமாறு இந்த அவசரச் சட்டம் திருத்துகிறது. இதர வங்கிகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஏற்கனவே உள்ள அதிகாரங்களை கூட்டுறவு வங்கிகளுக்கும் நீட்டித்து, வலுவான வங்கி ஒழுங்குமுறைக்காக ஆளுகை மற்றும் மேற்பார்வையை மேம்படுத்தி, சிறப்பான தொழில்முறையை உறுதி செய்து, மூலதனத்தை நோக்கிய அணுகுமுறையை அவர்களுக்கு அளித்து, பணம் சேமித்து வைத்துள்ளோரின் நலன்களை பாதுகாத்து, கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. மாநிலக் கூட்டுறவு சட்டங்களின் கீழ் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் மாநிலப் பதிவாளர்களின் அதிகாரங்களை இந்தத் திருத்தங்கள் பாதிக்காது. தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், வேளாண் வளர்ச்சிக்கு நீண்ட காலக் கடன் அளிப்பதை தங்கள் அடிப்படை குறிக்கோளாகவும், முதன்மை வணிகமாகவும் கொண்டுள்ள கூட்டுறவு சங்கங்கள், 'வங்கி', 'வங்கியாளர்' அல்லது 'வங்கியியல்' ஆகிய சொற்களைப் பயன்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் காசோலைகளைப் பணமாக மாற்றித் தராத நிறுவனங்களுக்கு இந்த சட்டத் திருத்தங்கள் பொருந்தாது.
நிதி அமைப்புக்கு ஏற்படும் இடையூறைத் தவிர்க்க, பொதுமக்கள், பணம் சேமித்து வைத்துள்ளோர் மற்றும் வங்கி அமைப்பின் நலன்களைப் பாதுகாக்கவும் மற்றும் அதன் சரியான நிர்வாகத்தை தடை ஆணை இல்லாத நிலையிலும் உறுதி செய்யவும், ஒரு வங்கி நிறுவனத்தின் மறுசீரமைப்பு அல்லது இணைப்பிற்கான ஒரு திட்டத்தை தயார் செய்வதற்கு, வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் 45வது பிரிவையும் இந்த அவசரச் சட்டம் திருத்துகிறது.