2020 ஜூன் 21-ஆம் தேதி அனல் வட்ட சங்கிராந்தி சூரிய கிரகணம்.!
2020 ஜூன் 21-ஆம் தேதி அனல் வட்ட சங்கிராந்தி சூரிய கிரகணம்.!

கதிர் மண்டலத் திருப்பு முகம் எனப்படும் அரிய வானியல் நிகழ்வான வருடாந்திர சூரிய கிரகணம் ஞாயிறன்று நிகழ்கிறது. இந்த ஆண்டில் நடைபெறும் முதல் சூரிய கிரகணம், பூமியின் வடகோளத்தில், நீண்ட நேரப் பகலான ஜூன் 21 அன்று அனல் வட்ட சங்கிராந்தியாக நிகழ்கிறது. இந்த சூரியகிரகணத்தை, அனுப்கர், சூரத்கர், சிர்சா, ஜக்கல், குருச்சேத்ரா, யமுனாநகர், டேராடூன், தபோவன், ஜோஷிமத் ஆகிய இடங்களில் முழுவதுமாகக் காணலாம்.
இந்தியாவின் இதர பகுதிகளில் வசிப்பவர்கள் பகுதி கிரகணத்தைக் காணலாம். 2020 ஜூன் 21-ஆம் தேதி நிகழவிருக்கும் சூரியகிரகணத்தின் போது, சந்திரனின் வெளிப்புற அளவு சூரியனை விட 1 சதவீதம் சிறியதாக இருக்கும். இதன் விளைவாக, சூரியன் கடிக்கப்பட்ட ஆப்பிள் வடிவத்தில் தெரியும்.
சூரியனின் ஒரு சிறிய பகுதி, சந்திரனின் வட்டால் மறைக்கப்படும். முழு சூரியனையும் சந்திரனால் மறைக்க முடியாததால், சந்திரனைச்சுற்றி சூரிய ஒளியின் பிரகாசமான வட்டம் காணப்படும். இதன் காரணத்தால், இந்த சூரிய கிரகணம் '' அனல் வட்டம்'' எனக் கூறப்படுகிறது.
"இந்த வாய்ப்பை நாம் நழுவவிட்டால், இந்தியாவில், அடுத்த சூரிய கிரகணத்துக்கு நாம் 28 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த சூரிய கிரகணத்தை, பகுதி சூரிய கிரகணமாக, இந்தியாவில் 2022 அக்டோபர் 25-ஆம்தேதி காணலாம். இதனை நாட்டின் மேற்குப் பகுதியில் காணலாம்'', என்று இந்திய வானியல் கழகத்தின் கள ஆய்வு மற்றும் கல்விக்குழுவின் தலைவர் அனிக்கெட் சுலே கூறியுள்ளார்.
சூரியன் மிகப்பிரகாசமானது என்பதால், அதனை வெறும் கண்களால் நேரடியாகப் பார்ப்பது கண்களுக்கும், பார்வைக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும். சூரியனைப் பார்ப்பதற்கென தனி வகை காப்புக் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்ணாடிகள், சூரிய ஒளியை வடிகட்டி பாதுகாப்பாக சூரியனைக் காண்பதற்கு வழிவகுக்கின்றன.