2024-ஆம் ஆண்டுக்குள் உத்திர பிரதேசத்தில் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு - அசத்தும் யோகி அரசு!
By : Yendhizhai Krishnan
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021 - 2022-ஆம் ஆண்டிற்கான நிதியாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ₹10,870 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் 2024-ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் ஆகஸ்ட் 15, 2019-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் 100 சதவிகித குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உத்திர பிரதேச மாநிலத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஜல் ஜீவன் திட்டத்திற்கு இந்த ஆண்டு மத்திய அரசு ₹10,870 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட நிதியை விட நான்கு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உத்தர பிரதேச கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு 2024-ஆம் ஆண்டிற்குள் 100% குடிநீர் இணைப்பு கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 2019 - 2020-ஆம் ஆண்டில் மத்திய அரசு ₹1,206 கோடியை ஒதுக்கியது, பிறகு இந்த தொகை 2020 - 2021-ல் ₹ 2,571 கோடியாக உயர்த்தப்பட்டது. எனவே, இந்த ஆண்டு, உத்தர பிரதேசத்தில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி நான்கு மடங்கு அதிகம் என்று ஜல் ஜீவன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 97,000 கிராமங்களில் 2.63 கோடி குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 30.04 லட்சம்(11.3 சதவீதம்) வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முன்பு 5.16 லட்சம்(1.96 சதவீதம்) வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் பெறும் வசதி இருந்தது.
கடந்த 21 மாதங்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 24.89 லட்சம்(9.45 சதவீதம்) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், உத்தர ப்பிரதேசத்தில் குழாய் நீர் விநியோகம் பெறாமல் சுமார் 2.33 கோடி வீடுகள் உள்ளன என்றும், ஆகவே தற்போது ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது இன்று ஜல் ஜீவன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.