3 கி.மீ நீளமுள்ள அனகோண்டா ரயிலை இயக்கிய இந்திய ரயில்வே - 251 பெட்டிகளை கண்டு பிரம்மித்துப்போன மக்கள்!
3 கி.மீ நீளமுள்ள அனகோண்டா ரயிலை இயக்கிய இந்திய ரயில்வே - 251 பெட்டிகளை கண்டு பிரம்மித்துப்போன மக்கள்!

நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரே ரயிலாக இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச் செல்லப் பயன்படும் சரக்குப் பெட்டகங்கள் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைத்து 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள நீண்ட ரயிலை உருவாக்கினர்.
இந்திய ரயில்வேயில் 3 சரக்கு ரயில்களின் காலி பெட்டிகளை (வேகன்) ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒரே ரயிலாக இணைத்து இயக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு இயக்கப்படும் ரயிலை அனகோண்டா ரயில் என அழைப்பார்கள். காரணம், ஒரே நேரத்தில் ஓரிடத்தில் 3 சரக்கு ரயில்களின் காலி பெட்டிகள் சேர்க்கப்படுவது அரிதாகும்.
இதற்கு முன் தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் இம்மாதிரி 3 சரக்கு ரயில்களின் காலி பெட்டிகளை இணைத்து அனகோண்டா ரயிலாக இயக்கியுள்ளனர்.
தற்போது இயக்கப்பட்ட 4 ஜோடி மின்சார எஞ்சின்கள், 4 கார்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலிச் சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. சேஷ்நாக் எனப் பெயரிடப்பட்ட இந்த நீளமான ரயிலை இயக்கித் தென்கிழக்கு மத்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈரோட்டில் இருந்து இதே மாதிரியான ஒரு ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.