Kathir News
Begin typing your search above and press return to search.

சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 3 – 5 மடங்கு கூடுதல் லாபம் - காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தகவல்

“விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாதாரண பயிர்களில் இருந்து எடுக்கும் லாபத்தை விட முறையாக மரப்பயிர் விவசாயம் செய்தால் 3 – 5 மடங்கு கூடுதலாக லாபம் எடுக்க முடியும்” என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 3 – 5 மடங்கு கூடுதல் லாபம் - காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  18 Sep 2022 2:20 PM GMT

"விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாதாரண பயிர்களில் இருந்து எடுக்கும் லாபத்தை விட முறையாக மரப்பயிர் விவசாயம் செய்தால் 3 – 5 மடங்கு கூடுதலாக லாபம் எடுக்க முடியும்" என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிலுள்ள 'லிட்டில் ஊட்டி' என்ற வேளாண் காட்டில் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் இன்று(செப் 18) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு முன்னோடி விவசாயிகளும், வேளாண் வல்லுநர்களும் ஆலோசனை வழங்கினர்.

இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மரப்பயிர் விவசாயி திரு.பூமாலை அவர்கள் பேசுகையில், "மரப்பயிர்களிலேயே மலைவேம்பை மிக குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்க விடலாம். நான் என்னுடைய தோட்டத்தில் 3 ஏக்கரில் ' வளர்த்த மலை வேம்பை சமீபத்தில் ரூ.12 லட்சத்திற்கு விற்பனை செய்தேன். மரங்களுடன் சேர்த்து சமவெளியில் மிளகும் சாகுபடி செய்து வருகிறேன்.

மிளகு கொடியானது நான்காம் ஆண்டிலிருந்து காய்க்க தொடங்கிவிடும்.ஒரு கிலோ மிளகு தற்போது ரூ.1000 - திற்கு விற்பனை ஆகிறது. ஒரு ஏக்கரில் 300 கிலோ முதல் 400 கிலோ வரை மிளகு சாகுபடி செய்ய முடியும். அந்த வகையில் மிளகிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 3 முதல் 4 லட்சம் கூடுதலாக லாபம் கிடைக்கும்" என்றார்.

கோவையிலுள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானி திரு.மாயவேல் அவர்கள் பேசுகையில் 'இந்தியாவில் ஆண்டுக்கு 153 மில்லியன் மெட்ரிக் மீட்டர் கியூப் அளவிற்கு மரத்தின் தேவை உள்ளது. அதில் கிட்டத்தட்ட 50 – 60 சதவீதம் தேவையை மட்டுமே உள்நாட்டிலிருந்து பூர்த்தி செய்ய முடிகிறது. மீதமுள்ள தேவைக்காக நாம் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் மரங்களை இறக்குமதி செய்கிறோம். எனவே, மர விவசாயம் செய்வதால் விவசாயிகள் கண்டிப்பாக லாபம் பார்க்க முடியும். நிலத்தின் மண் மற்றும் நீரின் தன்மை, விவசாயிகளின் பராமரிப்பை பொறுத்து 6 – 7 ஆண்டுகளில் மலை வேம்பை அறுவடை செய்து லாபம் பார்க்கலாம். தற்போது ப்ளைவுட்டிற்காக ஒரு டன் மலைவேம்பு ரூ.8,500-க்கு விற்பனையாகிறது. ஒரு ஏக்கரிலிருந்து சுமார் 125 டன் அறுவடை செய்ய முடியும்' என்றார்.

ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் டாக்டர். ஹரிதாஸ் பலா மரங்களில் பல வழிகளில் லாபம் எடுப்பது குறித்து விரிவாக பேசினார். அவர் பேசுகையில் "தற்போதைய மதிப்பீட்டின் படி ஒரு பலா மரத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு பழத்திலிருந்து ஒரு கோடியும் மரத்திலிருந்து ஒரு கோடியும் வருவாய் ஈட்ட முடியும். பழத்தை நேரடியாக விற்பனை செய்வதை தவிர்த்து, ஜாம், அல்வா, பிரியாணி, காபி போன்ற வேறு சில வகையில் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முடியும். பலா மரம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பது மட்டுமின்றி நீரிழிவு நோய், புற்றுநோய், உடல் பருமன், மலச்சிக்கல் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கான மருத்துவ குணங்களுக்கும் பயன்படுகிறது. பலா மரம் பல நூறு ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடியது' என்றார்.

விழாவில் காவேரிகூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள் பேசுகையில் "சத்குரு அவர்களின் முயற்சியாலும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாலும் விவசாயிகளிடம் மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாறுவதற்கான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இதன் விளைவாக கொரோனா பாதிப்பு சூழலிலும் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 2.10 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளோம். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி மரக்கன்றுகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். ஈஷா நர்சரிகள் மூலம் தரமான டிம்பர் மரக்கன்றுகளை ரூ.3 க்கு விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறோம். எங்களுடைய பல ஆண்டு நேரடி அனுபவத்தின் படி நெல், கரும்பு போன்ற சாதாரண பயிர்களை விட மரப்பயிர் விவசாயம் செய்யும் விவசாயிகள் 3 – 5 மடங்கு கூடுதல் லாபம் ஈட்டுவதை நாங்கள் கண்கூடாக பார்த்து வருகிறோம்' என்றார்.

இக்கருத்தரங்கின் தொடக்க விழாவில் தோட்டத்தின் உரிமையாளர் டாக்டர். துரைசாமி, அவருடைய மகள் டாக்டர்.வினோலா, முன்னோடி விவசாயிகள் திரு.திருமலை, திரு.இராமன், திரு.பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News