300 ஆண்டுகள் பழமையான கோவில் இடத்தை ஆக்கிரமிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் முயற்சி.. களத்தில் இந்துமுன்னணி..
By : Bharathi Latha
திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் அருகே உள்ள குமரன் குன்று செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை கிறிஸ்தவ மிஷனரிகள் ஆக்கிரமிப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் அவர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் அந்த இரண்டு ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இந்நிலையில், செல்வ முத்துக்குமார சுவாமி கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நேற்று (03.08.24) நடைபெற்றன. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசினார். அப்போது அவர் இதுபற்றி விரிவான விளக்கங்களை கொடுத்து இருக்கிறார். அதில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் கூறும் பொழுது, "பெருமநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகா் பகுதியில் 2 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் காலியாக உள்ளது.
இந்த இடத்தை இலங்கை அகதிகள் முகாம் அமைப்பதற்கு வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். அந்த நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிலருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதாகவும், பட்டா பெற்றவா்கள் நிலத்தை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மற்றொருபுறம் அந்த இடத்தில் அமைந்துள்ள குமரன் குன்று முருகன் கோயில் 300 ஆண்டுகள் பழைமையானது என்றும், எனவே கோயில் அருகே உள்ள இடத்தை கோயிலுக்கே வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
குமரன் குன்று செல்வ முத்துக்குமார சுவாமி கோயில் சுமாா் 300 ஆண்டுகள் பழைமையானது. இந்த இடத்தை இலங்கை அகதிகள் முகாமாக மாற்றும் நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும். இந்த நிலத்தை கோயிலுக்கே ஒதுக்க வேண்டும்" என்று கூறினார். மேலும் இந்த சந்திப்பின் போது, இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் கிஷோா்குமாா், மாநிலச் செயலாளா் வி.எஸ்.செந்தில்குமாா், கோட்டச் செயலாளா் குறிஞ்சி சேகா், பாஜக செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, பாஜக ஒன்றிய பொதுச் செயலாளா்கள் முத்துக்குமாா், குட்டி குமாா், வழக்குரைஞா் வித்யாஸ்ரீ, பாஜக நிா்வாகி சாமிநாதன், கோயில் நிா்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.
Input & Image courtesy:News