301 கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
By : Shiva
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் அர்ச்சகருக்கு தமிழக அரசின் சார்பாக 4000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையும் 16 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டன.
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் பரவத் தொடங்கியதும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாழ்வாதாரத்தை இழந்த அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 301 கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது.
கொரோனா உதவி தொகை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பாக, அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கொரோனா நிவாரண தொகையை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால் நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பட்டாச்சாரியர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
எனவே அவர்களின் வாழ்வாதாரத்திற்காக இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 301 கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 16 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்று கூறினார்.