Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு முழு விபரம்.!

தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு முழு விபரம்.!

தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு முழு விபரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 1:35 AM GMT

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

29.6.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் மாண்புமிகு முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால்தான், கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள்.





பல்வேறு தினங்களில் முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 22.6.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், 29.6.2020 அன்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.





தமிழக அரசு மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யிருப்பதாவது:-

. பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் - Except Containment Zones), 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:-

i. கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

ii. தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

iii. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

iv. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

v. வணிக வளாகங்கள் (malls) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

vi. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

vii. உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.

viii. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

ix. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் (E-Commerce) வழங்க அனுமதிக்கப்படுகிறது.

x. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

xi. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்சாவும் அனுமதிக்கப்படுகிறது.

xii. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

மேலும், அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News