ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்புச் சலுகைகளை ரத்து செய்த பின் பிரதமர் மோடியை வழிபடத் தொடங்கிவிட்டேன்''!! முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்புச் சலுகைகளை ரத்து செய்த பின் பிரதமர் மோடியை வழிபடத் தொடங்கிவிட்டேன்''!! முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
By : Kathir Webdesk
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று போபாலில் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
''நான் பாரத மாதாவை பூஜிப்பவன். ஒருவரைக் கொலை செய்பவர் மட்டும் கிரிமினல் அல்ல, தேசத்துக்கு எதிரான செயல்கள் செய்தால் அதைக் காட்டிலும் மிகப்பெரிய குற்றம் இருக்க முடியாது.
நான் உண்மையான தகவல்கள் அடிப்படையில் பேசுகிறேன். அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு, அதாவது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு வழங்கினார். காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லா மீது கொண்டிருந்த அளவுக்கு மீறிய அன்பால் அந்தச் சிறப்புச் சலுகைகளை நேரு வழங்கினார்.
அதற்கான காரணம் நேருவுக்கு மட்டும்தான் தெரியும். ஜன சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, இந்த இரட்டைக் குடியுரிமை மற்றும் சிறப்புச் சலுகைக்கு எதிராகப் போராடி வந்தது.
நேரு குறித்து நான் பேசும் அனைத்து வார்த்தைகளுக்கும் நானே பொறுப்பு. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பண்டிட் நேரு செய்த அனைத்து தவறுகளும் பிரதமர் மோடியால் சரி செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு தவறாக இந்தியப் படைகளை வைத்து பாகிஸ்தான் பழங்குடியினப் படைகளைத் துரத்திவிடும் போது, ஒருதரப்பாக போர் நிறுத்தம் செய்ததாகும். இதற்கு இப்போது காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் குறித்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஏன் பேசவில்லை.
நான் பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் என் தலைவர்களாகப் பார்க்கிறேன். இப்போது இருவரையும் நான் பூஜிக்கிறேன். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புச் சலுகைகளை ரத்து செய்த பின் நான் பிரதமர் மோடியை வழிபடத் தொடங்கிவிட்டேன்''. இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.