Kathir News
Begin typing your search above and press return to search.

பிரம்மாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய 'எலி வளை' தொழிலாளர்கள்- பிரதமர் மோடி , ஜனாதிபதி பாராட்டு!

பிரம்மாண்ட எந்திரத்தால் கூட சாதிக்க முடியாததை 'எலிவளை தொழிலாளர்கள்' சாதித்து காட்டி சுரங்க தொழிலாளர்களை மீட்க காரணமாக இருந்ததை ஒட்டி பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரம்மாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய எலி வளை தொழிலாளர்கள்-  பிரதமர் மோடி , ஜனாதிபதி பாராட்டு!

KarthigaBy : Karthiga

  |  29 Nov 2023 11:41 AM GMT

நிலக்கரி சுரங்கங்கள் போன்றவற்றில் சட்டவிரோதமாக சிறிய சுரங்கங்கள் அமைத்து அவற்றின் மூலம் நிலக்கரி திருடுவது சிலரின் வழக்கம். சில அடிகள் முதல் பல அடிகள் வரை நீளும் இந்த குறுகிய ஆபத்தான சுரங்கங்களில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழைய முடியும். இந்த சுரங்கங்கள் 'எலி வளை சுரங்கங்கள் ' என்றும் அவ்வாறு சுரங்கம் தோண்டுவோர் 'எலிவளை சுரங்க தொழிலாளர்கள் ' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இது சட்டத்தை மீறிய செயல் என்பதால் பிடிபட்டால் சிறை நிச்சயம். அத்துடன் சமயங்களில் இந்த 'எலி வளை' சுரங்கங்களில் திடீரென தண்ணீர் புகுவது , இடிந்து விழுவது போன்றவற்றால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டு பலியாகும் பரிதாபமும் நடக்கும். ஆனால் இந்த எலிவளை சுரங்க தொழிலாளர்கள் தான் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இறுதி கட்ட மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர். இந்த பணியை மேற்கொள்ள இவர்கள்தான் சரியானவர்கள் என்று சுரங்க பாதை கட்டுமான பணியை மேற்கொண்ட நவயுதா இன்ஜினியரிங் நிறுவனம் முடிவு செய்தது.

அதையடுத்து டெல்லி, ஜான்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 12 எலி வளை சுரங்க தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் குழாய்களுக்குள் சென்று 10 மீட்டர் இடிபாடுகளுக்குள் 24 மணி நேரத்துக்குள் துளையை ஏற்படுத்தி விட்டனர். இது மீட்பு படையினர் எதிர்பார்த்ததையும் விட மிகவும் குறைவான நேரம் ஆகும். அத்துடன் இந்த தொழிலாளர்கள் பயன்படுத்தியது மண்வெட்டி போன்ற சிறிய கருவிகள் எளிய சாதனங்கள் தான். எலி வளை சுரங்கம் அமைப்பது சட்டவிரதமாக இருக்கலாம் .ஆனால் அந்த தொழிலாளர்களின் அனுபவம் திறமையும் தான் கடைசியில் கை கொடுத்தது எனது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சையத் அடா ஹஸ்நைன் பாராட்டு தெரிவித்தார்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் "உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கிய அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்பட்டு விட்டனர் என்பதை அறிந்து நான் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன். மீட்பு முயற்சிகள் தடங்கல்களை எதிர்கொண்டதால் 17 நாட்களாக தொழிலாளர்கள் பட்ட சிரமங்கள் மனிதனின் தாக்குபிடிக்கும் திறனுக்கு சான்றாக விளங்குகின்றது. வரலாற்றிலேயே மிகவும் கடினமான மீட்பு நடவடிக்கை ஒன்றை அசாதாரண உறுதி தீர்மானத்துடன் மேற்கொண்ட அனைத்து நிபுணர்கள் மீட்பு குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் "இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மனிதம், குழுப்பணிக்கான அற்புதமான உதாரணத்தை உருவாக்கியுள்ளனர்" என்று பாராட்டியுள்ளார். மேலும் அவர் "மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது எல்லோருக்குமே ஒரு உணர்ச்சிகரமான தருணம். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நான் கூறுவது, உங்களின் தைரியமும் பொறுமையும் மிகவும் ஊக்கம் அளிக்கும் விஷயம். உங்கள் குடும்பத்தினரின் பொறுமையும் தைரியமும் கூட பாராட்டுக்குரியவை.

நீண்ட காத்திருப்பதற்குப் பின் நமது இந்த நண்பர்கள் தங்கள் அன்புக்குரியவர்களே சந்திக்கப் போகிறார்கள் என்பது பெரும் திருப்தி அளிக்கிறது. உங்களின் ஆரோக்கியத்துக்கும் நலத்துக்கும் நான் விழைகிறேன் "என்று கூறியுள்ளார். உத்தரகாண்ட முதல் மந்திரி புஷ்கரசிங் தாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக கேட்டறிந்தார்.

SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News