Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தரகாண்ட் சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!

KarthigaBy : Karthiga

  |  29 Nov 2023 10:15 AM GMT

கங்கோத்ரி - யமுனோத்ரி இடையே சார்தாம் புண்ணிய வழித்தட தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா- தண்டல்கான் இடையே சுமார் 4.30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்க பாதை பணி நிறைவடைந்தால் 28 கிலோமீட்டர் பயண தூரம் 4.30 கிலோ மீட்டர் தூரமாக குறையும். இதற்கான பணிகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கடந்த 12-ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் சுரங்கத்தின் வெளிவாயில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் பாறைகள் இடிந்து விழுந்து மூடிக்கொண்டதால் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து நடந்து வந்தது. இடுபாடுகளுக்கு இடையே சிறிய குழாய் மூலம் ஆக்ஸிஜன் , உணவு, குடிநீர் ,மருந்துகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்களின் தகவல் தொடர்புக்காக வாக்கிடாக்கிகளும் உள்ளே அனுப்பப்பட்டன. குழாய் வழியே அனுப்பப்பட்ட எண்டோஸ்கோபி கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவும் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதால் அவர்களின் நிலை குறித்து குடும்பத்தினருக்கு நிம்மதி பிறந்தது.

மீட்பு பணி தொடர்ந்து தடங்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்தது. அதற்கு துளையிடும் பிரம்மாண்ட எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளும் இடைபாடுகளுக்கு இடையே தொலையிடும்போது இடையூறாக எதிர்பட்ட உலோக துண்டுகளும் பெரும் பாறைகள் போன்றவையும் காரணம். குகைக்குள் எந்திரம் மூலம் துளையிடுவது இயலாது போனதால் இடைபாடுகளுக்குள் செலுத்தப்பட்ட குழாய்களுக்குள் ஆட்களை அனுப்பி மண்வெட்டிகளால் இடிபாடுகளை வெட்டி அகற்றும் நடவடிக்கை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. 'எலி வளை தொழிலாளர்கள்' எனப்படும் குறுகிய சுரங்கங்களை உருவாக்கும் அனுபவம் வாய்ந்த 12 தொழிலாளர்கள் இதில் இணைக்கப்பட்டனர்.

சுரங்கப்பாதைக்கு மேலே செங்குத்தாக துளையிடும் பணியும் தொடங்கியது. குகைக்குள் இடிபாடுகளுக்கு இடையே 57 மீட்டர் தூரத்துக்கு துளை இட வேண்டிய நிலையில் 52 மீட்டர் தூரம் வரை துளையிடப்பட்டு குழாய்கள் செலுத்தப்பட்டு விட்டதாக உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று அறிவித்தார். பின்னர் பிற்பகல் 2:30 மணியளவில் அவர் வெளியிட்ட x பதிவில் குழாய்களை செலுத்தும் பணி முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இடுபாடுகளுக்குள் செலுத்தப்பட்ட குழாய்களுக்குள் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சென்று தொழிலாளர்களை மீட்டு வருவார்கள் என்று தகவல் பரவியது. அதை அடுத்து சுரங்கப்பாதை பகுதியில் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் டாக்டர்கள் தயாராக இருந்தனர். உத்தர் காசி மாவட்டத்தில் சிலியா லிசார் நகரில் 41 படுக்கை சிறப்பு வார்டும் தயார்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் தயார் நிலையில் இருந்தன. ஆம்புலன்ஸ்கள் தடை இன்றி விரைவாக செல்ல சாலைகளும் சீரமைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையில் சுரங்கப்பாதை இடிபாடுகள் வழியாக தொழிலாளர்கள் மீட்கப்படுவது உறுதியானதால் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. தொழிலாளர்கள் சிக்கி இருந்த பகுதிக்குள் குழாய் வழியாக சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தொழிலாளர்களை அதன் வழியாகவே ஒருவர் பின் ஒருவராக இரவு எட்டு மணி அளவில் மீட்டு வர தொடங்கினர். அவர்கள் குழாய்க்குள் சக்கரங்கள் பொருத்திய ஸ்டிரெச்சர்கள் மூலம் மீட்டு வரப்பட்டனர். தொடக்கமாக ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். விஜய் என்ற தொழிலாளர் முதலில் வெளியே வந்தார். வெளியே வந்த தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கு பின் முதல் முறையாக சுதந்திர காற்றை சுவாசித்தனர்.

அவர்களை சுரங்க பாதை பகுதியில் முகாமிட்டிருந்த முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி , மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் அன்போடு நலம் விசாரித்தனர். ஒருவர் பின் ஒருவராக 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டினர். சுரங்கப்பாதைக்கு வெளியே அவர்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்த குடும்பத்தினரும் உறவினர்களும் ஆனந்த கண்ணீர் விட்டனர். தோழர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் மட்டுமின்றி நாட்டின் 140 கோடி மக்களும் நேற்றுதான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News