Kathir News
Begin typing your search above and press return to search.

மசூதியில் தற்கொலை படை தாக்குதல் - பாகிஸ்தானில் பயங்கரம் 46 பேர் உடல் சிதறி பலி

பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 46 பேர் உடல் சிதறி பலியாகினர்.

மசூதியில் தற்கொலை படை தாக்குதல் - பாகிஸ்தானில் பயங்கரம் 46 பேர் உடல் சிதறி பலி

KarthigaBy : Karthiga

  |  31 Jan 2023 5:30 AM GMT

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அந்த பகுதியில் உள்ள போலீசார், ராணுவ வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இந்த மசூதியில் தான் தொழுகை நடத்துவார்கள். எனவே 4 அடுக்கு பாதுகாப்பை கடந்து தான் இந்த மசூதிக்கு செல்ல முடியும். இந்த நிலையில் நேற்று மதியம் இந்த மசூதியில் வழக்கம் போல் தொழுகை நடந்து கொண்டிருந்தது. போலீசார் ராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு மத்தியில் இருந்த தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் வந்து உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.


பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது குண்டுகள் வெடித்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த பலர் உடல் சிதறி பலியாகினர். மேலும் குண்டு வெடிப்பில் மசூதியில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது இதில் ஏராளமானவர் இடுபாடுகளில் சிக்கினர்.இதனிடையே உயிர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதல் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போலீசார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த தற்கொலை படை தாக்குதலில் 46 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.


உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போலீசார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைகிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மசூதியின் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது .இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது . இதனிடையே பெஷாவரில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைப்படை தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


இந்த தாக்குதல் குறித்து பெஷாவர் போலீஸ் சூப்பிரண்டு ஷாஷாத் கவ்காப் கூறுகையில், " தொழுகை நடத்துவதற்காக மசூதிக்குள் நான் நுழைந்த போது குண்டுகள் வெடித்தன. எனினும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினேன். குண்டுவெடிப்பு நடந்த போது 300 முதல் 400 போலீசார் வரை அங்கு இருந்தனர் என்றார் .இந்த நிலையில் மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் பாகிஸ்தானை பாதுகாக்கும் கடமையை செய்பவர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் அச்சத்தை உருவாக்க விரும்புகிறார்கள். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தியாகம் வீண் போகாது. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது என தெரிவித்தார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News