ஒரே நாளில் கோவை அன்னூரை சேர்ந்த 50 விவசாயிகள் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தனர்
ஒரே நாளில் கோவை அன்னூரை சேர்ந்த 50 விவசாயிகள் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தனர்
By : Kathir Webdesk
அனைத்து சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கென்று ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய மோடி அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. இதன்படி 60 வயது கடந்த தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இது தன்னார்வ மற்றும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் ஆகும். 18-40 வயது விவசாயிகள் இதில் சேரலாம். பயனாளிகள், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) ஓய்வூதிய நிதி திட்டத்தில் உறுப்பினராக சேரலாம்.
இந்த திட்டத்தில் 29 வயதான ஒரு விவசாயி சேருகிறபோது மாதம் ரூ.100 செலுத்த வேண்டும். அரசும் இதே தொகையை செலுத்தும்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டத்தில், கோவை அன்னூர் பகுதியில் ஒரே நாளில் 50 பேர் இணைந்துள்ளனர். அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இத்திட்டத்தில், 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் இணையலாம். விவசாயிகள் தங்கள் வயதுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும், 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். விவசாயி செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை மத்திய அரசு மானியமாக செலுத்தும். 60 வயதுக்கு பின், மாதம், 3,000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும்.பென்ஷன் பெறுபவர், இறந்து விட்டால், அவரது வாரிசுக்கு பாதி தொகை பென்ஷனாக வழங்கப்படும்.
செலுத்தும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்கு பின் பாதியில் நிறுத்தி விட்டாலும், வட்டியுடன் திரும்ப பெறலாம்.அன்னுார் பகுதியிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்களில், ஆதார் கார்டு, பாங்க் பாஸ் புத்தக நகல் ஆகியவற்றை கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். தொகையை மாத தவணை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு முறை செலுத்தலாம்.இதன் மூலம், 60 வயதிலிருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெறலாம். இத்திட்டத்தில் ஒரே நாளில், 50 விவசாயிகள் இணைந்துள்ளனர். அரசின் இந்த திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு அன்னுார் வேளாண் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்", என்று அதில் தெரிவித்துள்ளார்.