உள்நாட்டு வரத்தை அதிகரிக்க வெல்லப்பாகு மீது 50 சதவீத ஏற்றுமதிவரி - மத்திய அரசு நடவடிக்கை!
வெல்லப்பாகு உள்நாட்டு வரத்தை அதிகரிக்க ஏற்றுமதி மீது 50 சதவீத வரி விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
By : Karthiga
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் பெட்ரோலில் எத்தனால் என்னும் திரவ பொருளை அதிக அளவில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெட்ரோலில் 15 சதவீதம் எத்தனால் கலக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயத்தில் உள்ளது. அதற்கு எத்தனால் அதிகமாக தேவைப்படும் என்று தெரிகிறது. எத்தனால் தயாரிக்க கரும்பிலிருந்து கிடைக்கும் துணைப் பொருளான வெல்லப்பாகு முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகிறது.
ஆனால் வெல்லப்பாகுவை வியட்நாம், தென்கொரியா ,நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்து வருகிறார்கள். அதை தடுத்து உள்நாட்டில் வெல்லப்பாகு வரத்தை அதிகரிப்பதற்காக வெல்லப்பாகுக்கு மத்திய அரசு 50 சதவீத ஏற்றுமதிவரி விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பாணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் எத்தனால் தயாரிக்கும் உள்நாட்டு ஆலைகளுக்கு போதுமான அளவு வெல்லப்பாகு கிடைக்கும். நடப்பு பருவத்தில் கரும்பு உற்பத்தி 37 மில்லியன் டன்களில் இருந்து 33 மில்லியன் டன்னாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் மத்திய அரசு ஏற்றுமதி வரி விதித்துள்ளது.
SOURCE :DAILY THANTHI