வருவாய் பற்றாக்குறை மானியம் ₹ 6,195 கோடி விடுவிப்பு - மாநிலங்களுக்கு தொடரும் நிதி உதவி.!
வருவாய் பற்றாக்குறை மானியம் ₹ 6,195 கோடி விடுவிப்பு - மாநிலங்களுக்கு தொடரும் நிதி உதவி.!

கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கலை சமாளிக்க மூன்றாவது தவணையாக வருவாய் பற்றாக்குறை மானியத்தில் மாநிலங்களின் பங்கான ₹ 6,000 கோடி ரூபாய் நிதியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
ஆந்திர பிரதேசம், கேரளா, இமாசலப் பிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், தமிழ்நாடு, பஞ்சாப், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் தவிர 6 வடகிழக்கு மாநிலங்களையும் சேர்த்து 14 மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அலுவலகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ள தகவலில் "ஜுன் 10,2020 அன்று 15வது நிதி ஆணையத்தின் பரிநிதுரைப்படி ₹ 6,195.08 கோடி வருவாய் பற்றாக்குறை மானியம் மூன்றாவது தவணையாக 14 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா தொற்று பரவல் சூழலில் மாநிலங்களுக்கு உதவும் நிதி ஆதாரமாக இருக்கும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் ஏற்பட்ட இடையூறுகளால் மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டவும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் அவசரமாக ஏற்படும் நிதித் தேவையை சந்திக்கும் விதமாக குறித்த காலத்துக்கு முன்னரே இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 14 மாநிலங்களில் அதிக நிதி கேரளாவுக்கு சென்று இருக்கிறது. கேரளாவுக்கு ₹ 1,277 கோடியும் அதற்குப்பின் இமாச்சல பிரதேசத்திற்கு ₹ 953 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் ஏப்ரல் மாத வரி வசூலிப்பில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு ஊழியர்களின் சம்பளப் பணத்தை செலுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.