6,811 கோடியில் ஆன்மீக தலங்களுக்கு கேபிள் கார்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

By : Karthiga
உத்தரகண்ட் மாநில மலைப் பிரதேசத்தில் அமைந்த பிரபல ஆன்மீக வழிபாட்டு தளங்களான ஹேம் குந்த் சாஹிப் மற்றும் கேதார்நாத்தில் யாத்திரிகர்கள் வசதிக்கு ரூபாய் 6811 கோடியில் கேபிள் கார் சேவையை ஏற்படுத்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும் தேசிய கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை திருத்தி அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழும கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அதில் உத்தரகண்ட் மாநிலம் ருத்ர பிரயாக் மாவட்டத்தில் 11,968 அடி உயரத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு செல்வதற்கு சோன்பிராக்லியிலிருந்து 12.9 கிலோமீட்டர் தொலைவிற்கு கேபிள் கார் வசதி ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.ரூபாய் 481. 28 கோடி செலவில் அரசு மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த கேபிள் கார் வசதி நாள் ஒன்றுக்கு 18000 பயணிகளையும் ஒரு மணி நேரத்துக்கு 1800 பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக நவீன தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்படும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒரு ஜோதிலிங்க தலமான கேதர்நாத்துக்கு ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் யாத்திரிகர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் கோயிலை அடைய மலைப்பாதையில் நடைபயணம், குதிரை சவாரி, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கு, ஹெலிகாப்டர்கள் ஆகிய பல்வேறு வழிகளில் பயணிக்கின்றனர் .
கேபிள் கார் சேவை அறிமுகத்துக்கு பிறகு யாத்திரிகர்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கு மேல் உயரும் பயண நேரம் சுமார் 9 மணி நேரத்தில் இருந்து 36 நிமிஷங்களாக குறையும் என்று அமைச்சரவையின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பிரபல ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. மே முதல் செப்டம்பர் மாதம் வரை திறந்திருக்கும். இந்த குருத்வாராக்கு கடந்த ஆண்டு மட்டும் 1.7 லட்சம் யாத்ரீகர்கள் புனித பயணமாக வந்தனர். இங்கு நாளொன்றுக்கு 11 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் கேபிள் கார் வசதி 12.4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூபாய் 2703. 13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் எந்த வானிலை சூழ்நிலையிலும் கோவிந்த் காட் பகுதியில் இருந்து ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு யாதிரிகர்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும். யாத்திரிகர்களின் எண்ணிக்கை தற்போதை விட சுமார் பத்து மடங்கு உயரும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஹேம் குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு செல்லும் மலைப்பகுதியில் அமைந்துள்ள தேசிய பூங்கா யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
