Kathir News
Begin typing your search above and press return to search.

7 மாவட்டங்கள், 500 கிராமங்கள் - ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!

7 மாவட்டங்கள், 500 கிராமங்கள் - ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  17 Feb 2023 1:21 PM GMT

தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில் நேற்று (பிப்.17) மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்கைலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை சிவ பக்தர்களால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு

ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர் மற்றும் 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகள் கொண்ட தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்னையில் இருந்து கோவை ஈஷா யோகா மையம் வரை பாத யாத்திரையாக வருகை தந்தனர்.

இதில் மிக முக்கிய அம்சமாக 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகளுக்கென பிரத்தியேகமாக 63 பல்லக்குகள் உருவாக்கபட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் திரளும் பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து தேரில் பவனி வரும் நாயன்மார்களை பல்லக்குகளில் ஏற்றி பவனி வரும் வைபவம் நிகழ்த்தப்பட்டது.

அந்த வகையில் சென்னையிலிருந்து தேருடன் சிவ பக்தர்கள் பாத யாத்திரையாக 28 நாட்களில் 7 மாவட்டங்கள், 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 640 கிலோ மீட்டர் கடந்து கோவை ஆலாந்துறை பகுதிக்கு நேற்று வருகை தந்தனர். அங்கு கூடிய திரளான கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் யாத்திரை வந்தவர்களை மேளத் தாளத்துடன் வரவேற்றனர்.

பின்னர் ஈஷா யோகா மையத்தை அடைந்த அவர்கள் அங்கு தேரில் இருந்த 63 மூவர் திருமேனிகளை தனித் தனி பல்லக்குகளில் ஏற்றி பக்தி பரவசத்துடன் பவனி வந்தனர். பல்லக்குகளை ஈஷா தன்னார்வலர்கள், கிராம மக்கள், பழங்குடி மக்கள் என அனைவரும் தங்களது தோள்களில் சுமந்து ஆதியோகி முதல் தியானலிங்கம் வரை வலம் வந்தனர்.

இதுதவிர, பெங்களூரு, நாகர்கோவில், புதுக்கோட்டை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருந்தும் ஆதியோகி தேருடன் பாத யாத்திரையாக வந்த பகத்தர்களும் இந்த வைபவத்தில் இணைந்து கொண்டனர்.

நம் தமிழ்நாட்டில் சைவம் தழைத்தோங்கிட வீதி வீதியாய் அலைந்து திரிந்து திருமுறைகள் பாடி மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்திய பெரும் பங்கு நாயன்மார்களையே சேரும். அவர்கள் பாடிய சிவத் தலங்கள் பாடல் பெற்ற தலங்களாக இன்றும் அறியப்படுகிறது. தமிழ் பக்தி இலக்கியத்தில் அவர்களின் கொடை மகத்தானது. சைவத்திற்கும், தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய நாயன்மார்களை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களின் புகழை பரப்பும் வகையிலும் இந்த பாதயாத்திரை நிகழ்த்தப்படுகிறது.

இந்த பாத யாத்திரை ஈஷா யோகா மையம் சென்றடைந்த பின்னர் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் நிறைவடைகிறது. மேலும் பாத யாத்திரை வந்த பக்தர்கள் அனைவரும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிலும் கலந்து கொள்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News