இலங்கையில் ஊரடங்கை மீறிய 790 பேர் கைது - கண்காணிப்புக்கு டிமிக்கி கொடுத்தால் 3 ஆண்டு சிறை!
இலங்கையில் ஊரடங்கை மீறிய 790 பேர் கைது - கண்காணிப்புக்கு டிமிக்கி கொடுத்தால் 3 ஆண்டு சிறை!

இந்தியாவில் பிரதமர் மோடி அமைதியான முறையில் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இந்தியாவில் மக்கள் சுய ஊரடங்கு 100 சதவீதம் வெற்றி பெற்றது. ஆனால் இலங்கையில் ஊரடங்கை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தும் போலிஸ் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள காலப்பகுதியில் அதனை மீறி செயற்பட்ட 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 154 வாகனங்கள் போலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் போலிஸ் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதே போல வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் நாளை 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது அருகிலுள்ள போலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.அதன் பின்னர் குறித்த நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவர். வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும்.
இந்த அறிவித்தலை கவனத்தில் கொள்ளாதவர்கள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு துறையினரால் இணங்காணப்பட்டு மருத்துவ கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் அகற்றல் சட்டத்தின் கீழ் 3 வருடங்கள் சிறைத் தண்டனைக்கு உட்படுப்படுத்தப்படுவார்கள். அத்தோடு 14 நாட்கள் சிறை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.