8 மாதங்களாக தெடர்ந்து 1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வருவாய் - அசத்தும் மத்திய அரசு..!
By : Shiva
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையிலும் தொடர்ந்து எட்டாவது மாதமாக நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் மொத்த வசூல் ₹ 1,02,709 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் CGST ₹17,592 கோடியாகவும்,SGST ₹ 22,653 கோடியாகவும்,IGST ₹ 53,199 கோடியாகவும் மற்றும் Cess ₹ 9,265 கோடியும் வசூல் ஆகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மே மாதத்திற்கான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான தாமத கட்டண தள்ளுபடி செய்யப்படும் அல்லது குறைக்கப்படும் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 4ஆம் தேதி வரை உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வசூலான ஜிஎஸ்டியின் வருவாய் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IGSTயில் இருந்து செய்யப்படும் வழக்கமான பைசலான CGSTக்கு ₹ 15,014 கோடியையும், SGSTக்கு ₹ 11,653 கோடியையும் இந்த மாதத்தில் அரசு வழங்கியது. இந்த ஜிஎஸ்டி வருவாய் என்பது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 65 சதவீதம் அதிகமாக உள்ளது என்றும் கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது சரக்கு இறக்குமதி மூலம் வசூலான வருவாய் 56 சதவீதத்திற்கும் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் வசூலான வருவாய் 69 சதவீதம் அதிகமாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.