ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களுக்கு 80 ஆயிரம் கோடி மிச்சம் - பிரதமர் மோடி தகவல்
மக்கள் மலிவு விலையில் சிகிச்சை பெறுவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களுக்கு 80 ஆயிரம் கோடி மிச்சமானதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

By : Karthiga
பிரதமர் மோடி சுகாதாரத் துறை தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் அதில் பேசியதாவது :-
சுகாதார துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை பெருமளவு குறைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது . எனவே தொழில் முனைவோர் வெளிநாடுகளில் இருந்து எந்த தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்யக்கூடாது. தற்சார்புடன் திகழ வேண்டும் . ஒருங்கிணைந்த அணுகுமுறையோ ,தொலைநோக்கு பார்வையோ இல்லாமல் சுகாதாரத் துறை பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது. இந்த அரசு அதை சுகாதார அமைச்சகத்துடன் முடக்காமல் ஒட்டுமொத்த அரசின் பார்வையுடன் அணுகியது.
மக்களுக்கு மலிவு விலையில் சிகிச்சை கிடைக்க செய்வதே அரசின் முன்னுரிமை பணியாகும் . மத்திய அரசின் சுகாதாரத் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தால் மக்களுக்கு ரூபாய் 80 ஆயிரம் கோடியும், மலிவு விலையில் மருந்துகளை விற்கும் மக்கள் மருந்தகங்களால் 20,000 கோடியும் மிச்சம் ஆனது. கொரோனா காலத்தில் இந்திய மருந்துகள் துறை சர்வதேச நம்பிக்கையை பெற்றது.
சுகாதாரத் துறையை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என்று பிரித்துப் பார்க்க வேண்டும். கொரோனாவால் வளர்ந்த நாடுகளின் மருத்துவ கட்டமைப்புகளும் சீர்குலைந்தன. இந்த அரசு சுகாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது. சுகாதார கட்டமைப்புகள் இரண்டாம் நிலை நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. மக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே சிகிச்சையும் பரிசோதனைகளும் பெறுவதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
