ஊரடங்கு காலத்திலும் 83% உயர்ந்த உர விற்பனை!
ஊரடங்கு காலத்திலும் 83% உயர்ந்த உர விற்பனை!

அனைத்து வியாபாரங்களும் தொழில்களும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நஷ்டத்தைச் சந்தித்து வரும் நிலையில் உர விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் வேலைவாய்ப்பின்மை, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் குறைந்துள்ளது என்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்போது கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தைக் காட்டிலும் இந்த ஆண்டில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் உர விற்பனை 83% அதிகரித்துள்ளதாக அரசு தகவல்களை பகிர்ந்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் உர விற்பனை நிலையங்களில் 61.05 டன் விற்பனை பதிவான நிலையில் இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் 111.61 டன் விற்பனையானதாக கூறப்பட்டுள்ளது.
யூரியா விற்பனை 67% அதிகரித்து 64.82 லட்சம் டன்களும் டை அம்மோனியம் பாஸ்பேட் உரம் இரண்டு மடங்கு அதிகரித்து 22.46 லட்சம் டன்கள் விற்பனையானதாகக் கூறப்பட்டுள்ளது. கலவை உரங்களின் விற்பனை 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து 24.32 லட்சம் டன்கள் என்ற அளவைத் தொட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் போக்குவரத்து தடை பட்டிருக்கும் இந்த நிலையிலும் உர விற்பனை இந்த அளவிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.
எந்த தடையும் இல்லாமல் உற்பத்தி, விநியோகம், விற்பனை என அனைத்து நிலைகளிலும் உரங்கள் எளிதாகக் கிடைக்க வசதி செய்த மத்திய உரத் துறை, ரயில்வே, மாநில அரசுகள் மற்றும் துறைமுக அதிகாரிகள் என அனைவரையும் அவர்களின் சீரிய முயற்சிக்காக மத்திய அரசு பாராட்டியுள்ளது.