85 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்க ஏற்பாடுகள் மும்முரம்!
By : Shiva
கொரோனா வைரசுக்கு எதிராக ,ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்யாவில் 85 கோடி 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 'கோவாக்சின்' மற்றும் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளதால் ரஷ்ய தடுப்பூசியான 'ஸ்புட்னிக் - வி' என்னும் தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதற்காக மத்திய அரசு தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் பணிகளை மேற்கொண்டது.
தற்போது ரஷ்ய தடுப்பூசிகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக ரஷ்யாவிற்கான இந்திய துாதர் பால வெங்கடேஷ் வர்மா நேற்று தெரிவித்ததாவது, "இந்தியாவிற்கு இதுவரை 2.10 லட்சம் ஸ்புட்னிக் - வி தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த எண்ணிக்கை இந்த மாத இறுதிக்குள் 30 லட்சமாகவும் ஜூன் மாத இறுதிக்குள் 50 லட்சமாகவும் இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலேயே ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முதல் கட்டமாக 85 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனா வைரசுக்கு எதிராக உலக அளவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளின் 70% தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதேபோல் ரஷ்யாவின் மற்றொரு தடுப்பூசியான 'ஸ்புட்னிக் லைட்' என்ற தடுப்பூசியையும் ரஷ்ய அரசு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 85 கோடி தடுப்பூசிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது இந்தியாவின் தடுப்பூசி தேவையை நிறைவேற்றுவதாக இருக்கும் என்று தெரியவருகிறது.