பருவமழை தொடங்கியதில் இருந்து 87% அதிகரித்த விதைப்பு - மகிழ்ச்சியில் விவசாயிகள் .!
பருவமழை தொடங்கியதில் இருந்து 87% அதிகரித்த விதைப்பு - மகிழ்ச்சியில் விவசாயிகள் .!

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையை எதிர் கொண்டு வரும் இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. அத்துடன் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து வருவதாக வெளியான செய்தி இந்தியப் பொருளாதாரம் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதைக் காட்டியது.
தற்போது பருவமழை நன்கு பெய்து வருவதால் விவசாயப் பணிகள் அதிகரித்துளன என்ற செயிதியும் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப் பகுதி 87% அதிகரித்துள்ளதால் விவசாயப் பணிகள் ஏற்றம் கண்டுள்ளன.
கரீப் பருவத்தின் போது மொத்த விவசாய நிலப் பரப்பில் 40% நிலத்தில் நெல் விதைக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 39% அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படும் பகுதி மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்படும் நிலப்பகுதி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியா அரிசி மற்றும் பருத்தியை அதிகளவில் ஏற்றுமதி செய்து வரும் நிலையில் இந்த வருடம் அவற்றின் உற்பத்தி பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "பருத்தி விதைக்கப்படும் நிலம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரும்பாலான பஞ்சாப் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அரிசியிலிருந்து பருத்திக்கு மாறி விட்டனர். சரியான நேரத்தில் பருவமழை பெய்யும் பட்சத்தில் பரூத்தி உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று எகனாமிக் டைம்ஸ் இதழிடம் விவசாயத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விவசாயத் துறை கமிஷனர் மல்ஹோத்ரா கூறுகையில், "உணவு தானிய உற்பத்தி தேவைக்கும் அதிகமாகவே உள்ளது. ஆனால் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை நாம் அதிகமாக பயிரிட வேண்டும். எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பை அதிகரித்தால் நாம் சுயசார்பு நிலையை எட்டலாம்" என்று கூறியுள்ளார்.
மத்திய இந்தியாவில் எப்போதையும் விட அதிகமாக மழை பெய்ததன் காரணமாக சோயா பீன் விதைப்பு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் பருவ மழை குறைவாக இருந்த போது பயிரிடப்பட்ட நிலப்பரப்பௌ விட தற்போது ஐந்து மடங்கு அதிகமான நிலப்பரப்பில் சோயா பீன் விதைக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்க்காமல் எதிர்பார்த்த அளவு பெய்யும் பட்சத்தில் விவசாயம் தான் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் போலும்.