17,930 கோடி செலவில் அமைக்கப்படும் 90% ஸ்பீட் பிரேக் இல்லாத சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை: மார்ச் மாதம் நிறைவு!
17,930 கோடி செலவில் அமைக்கப்படும் சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் மார்ச் இறுதியில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
By : Karthiga
17,930 கோடி செலவில் அமைக்கப்படும் சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் மார்ச் இறுதியில் முடிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய நெடுஞ்சாலை துறை சார்பில் நாட்டின் நகரங்களுக்கு இடையே விரைவாக செல்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை தற்போது அமைக்கப்பட்டு வரும் 36 கிரீன்பீல்டு விரைவுச்சாலைகளில் ஒன்றாகும். கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்ற மத்திய அமைச்சர் நிதன் கட்கரி அங்கு நடைபெற்று வரும் சில நெடுஞ்சாலை பணிகளை பார்வையிட்டார்.
பெங்களூரு- மைசூர் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும் என்றும், சில பணிகள் நிலுவையில் இருந்தாலும் அவை திட்டமிட்டபடி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். பெங்களூரு- மைசூர் இடையே அமைக்கப்படுவது 10 வழிச் சாலை திட்டமாகும். இதில் இருபுறமும் 2 லேன்கள் நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள கிராம மக்கள் பயன்படுத்தலாம். மற்ற 6 லேன்கள் பெங்களூருவில் இருந்து நேரடியாக மைசூருக்கு செல்லும்.285.3 கிமீ தொலைவில் பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் சாலை 4 வழிச்சாலையாக அமையும். இவை முக்கிய நகரங்கள் மற்றும் நெரிசலான பகுதிகள் வழியாக செல்வதை தவிர்ப்பதால் பயண நேரம் கணிசமாக குறையும்.
இந்த சாலை தொழில்துறையினருக்கு முக்கியமானதாக இருக்கும். ஏற்கனவே, 231 கி.மீ. தூரத்திற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள், இந்த திட்டத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.பெங்களூரு நெரிசலைக் குறைக்கும் வகையில் பாரத்மாலா திட்டத்தின் கீழ் ₹17,000 கோடி மதிப்பீட்டில் பெங்களூரு சாட்டிலைட் சுற்று வட்டச் சாலையையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 288 கி.மீ சுற்றளவில் அமையும் இந்த சாலையில் 243 கி.மீ., கர்நாடகாவிலும், 45 கி.மீ., தமிழ்நாட்டிலும் அமைய உள்ளது. கர்னூலில் இருந்து சென்னை, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்குச் சாலை அமைக்கப்படும். இந்த சாலை குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என 6 மாநிலங்கள் வழியாகச் செல்லும்.
17,930 கோடி ரூபாய் செலவில் 262 கிமீ நீளமுள்ள பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வழியாகச் செல்லும். 240 கிமீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக மொத்தம் 2650 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இந்த சாலையில் 90 சதவீதம் ஸ்பீட் பிரேக் கிடையாது. 10 சதவீத இடங்களில் மெல்லிய பிளாஸ்டிக் ஸ்பீட் பிரேக் இருக்கும். இவை உயரம் குறைவாக இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
SOURCE :