9ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடேசன் சிலை - 22 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வருகை.!
9ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடேசன் சிலை - 22 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வருகை.!

22 ஆண்டுகளுக்குப் பின் ராஜஸ்தான் மாநிலத்தின் கடேஸ்வரா கோவிலில் இருந்து திருடிச் செல்லப்பட்டு சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட நடேசர் சிலை இந்தியாவிற்கு எடுத்து வரப்பட உள்ளது.
9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதிஹாரா முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த 1998ல் சிலை கடத்தல் கும்பலால் திருடப்பட்டது. உண்மையான நிலையைப் போலவே இருந்த போலி ஒன்றை வைத்துவிட்டு கடத்தப்பட்ட இந்தச் சிலை, இறுதியாக 2003ம் ஆண்டு லண்டனில் இருக்கும் J.கஸ்மின் என்ற கலைப்பொருள் ஆர்வலர் மற்றும் சேகரிப்பாளரின் கைக்கு வந்த போது, அவர் அதை லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷன் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
4 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள இந்த அற்புதச் சிலை ராஜஸ்தானில் 9ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பிரதிஹாரா வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடேசரின் வலது கால் பின்புறத்தில் அழகிய நந்தியின் வேலைப்பாடு இருக்கிறது.
Sotheby's: The Inside Story (1997) என்ற புத்தகம் மற்றும் அதனடிப்படையில் வெளியான BBC நிகழ்ச்சி ஆகியவற்றில் வெளிக்கொண்டு வரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ராஜஸ்தான் காவல்துறை வாமன் கியா என்ற சர்வதேச சிலை கடத்தல்காரன் மீது விசாரணை செய்யத் தொடங்கியது. 2003ல் அவன் கைது செய்யப்பட்ட போது கிட்டத்தட்ட 20,000 கலைப்பொருட்களை அவன் கடத்தி விற்றது தெரிய வந்தது. டெல்லியில் இருந்த அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனையிட்ட போது 506 கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 485 பொருட்கள் தொல்பொருட்கள் என்று இந்திய தொல்லியல்துறை ஆய்வு நிறுவனம் (ASI) உறுதி செய்தது.
கீழ்க் கோர்ட்டில் கியா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் 2014ம் ஆண்டில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது. இதற்கு கியாவால் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்பட்ட ஒரு தொல்பொருளைக் கூட இந்தியா மீட்டுக் கொண்டு வரவில்லை என்பது முக்கியக் காரணங்களுள் ஒன்றாக அமைந்தது.
கிரித் மன்கொடி என்ற ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் தான் 1998ல் தகுந்த ஆவணங்களையும் புகைப்பட ஆதாரங்களையும் வழங்கி இந்த வழக்கில் முக்கிய பங்காற்றினார். 'India Pride Project' என்ற தொலைந்து போன அல்லது கடத்தப்பட்ட இந்திய கலை மற்றும் தொல்பொருட்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ அமைப்பின் தொல்லியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கூட நடேசர் சிலையை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார் தி இந்து நாளிதழிடம், "இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாமன் கியா வழக்கை தூசி தட்டி 1960களில் இருந்து வாமன் கியா கும்பலால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தொல்பொருட்களை மீட்பதோடு அவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடும் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.