ஸ்லோவாக்கியா பிரதமர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு- பிரதமர் மோடி கடும் கண்டனம்!
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
By : Karthiga
ஸ்லோவாக்கியாவின் ஹண்ட்லோவா நகரில் நடைபெற்ற அரசு கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தினர். ஏறத்தாழ நான்கு முறை அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் நிலையில் இதில் ராபர்ட் பிக்கோவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளை தோட்டாக்கள் துளைத்தன. குண்டு காயம் ஏற்பட்டு தரையில் சுருண்டு விழுந்தவரை அருகிலிருந்த அவரது பாதுகாவலர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராபர்ட் பிகோ வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் அதே நேரம் அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் ஸ்லோவாக்கிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார். அவருக்குத் தீவிரத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்த போலீசார் என்ன காரணத்திற்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார் எதற்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .இந்நிலையில் ஸ்லோவாக்கிய பிரதமர் மீதான துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஸ்லோவாக்கியா பிரதமர் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் ராபர்ட் பிக்கோ விரைவில் குணமடைய விழைகிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். ராபர்ட் பிகோ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனமும் அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.
SOURCE :Maalainilavu