டெல்லியில் நடந்த 'மகளிர் அதிகாரம் -வளர்ந்த இந்தியா' நிகழ்ச்சியில் மோடி கூறிய புதிய அத்தியாயம்!
தனது மூன்றாவது பதவிகாலம் பெண் சக்தியின் எழுச்சியில் புதிய அத்தியாயத்தை எழுதும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.
By : Karthiga
டெல்லியில் 'மகளிர் அதிகாரம் - வளர்ந்த இந்தியா : என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மகளிருக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவேன் என நம்பிக்கை தெரிவித்ததுடன் பிரதமராக தனது மூன்றாவது பதவு காலம் பெண் சக்தியின் எழுச்சியில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பெண்களின் நிலையை உயர்த்தி அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் சமூகம் தான் முன்னேற முடியும். கழிவறை பற்றாக்குறை, சானிடரின் நாப்கின் பயன்பாடு, சமையலறை புகையால் ஏற்படும் விளைவுகள், வங்கி கணக்கு உள்ளிட்ட பெண்களின் ஏராளமான பிரச்சனைகள் குறித்த சுதந்திர தின உரையில் செங்கோட்டையில் பேசிய முதல் பிரதமர் நான் தான். ஆனால் செங்கோட்டையில் எப்போதெல்லாம் பெண்களைப் பற்றி பேசுகிறோமோ அப்போதெல்லாம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் என்னை கிண்டல் செய்தனர்.
முந்தைய அரசுகளுக்கு பெண்களின் வாழ்க்கைத் தரம் அவர்களது கடினமான வாழ்க்கை சூழல் போன்றவை குறித்து கவலை இல்லை. ஆனால் பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்கு உதவ பா.ஜனதா ஆட்சி பல்வேறு திட்டங்களுடன் வந்துள்ளது. எனது வீடு , அண்டை வீடுகள் மற்றும் வெளியில் பயணத்தின் போது கிராமங்களில் நான் கண்டவற்றை மனதில் வைத்தே பெண்களுக்கான திட்டங்களை உருவாக்கினேன். அந்த வகையில் பல்வேறு திட்டங்கள் மூலம் இதுவரை பெண்களுக்கு ரூபாய் 8 லட்சம் கோடிக்கு மேல் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் லட்சாதிபதி மகளிராக இருக்கிறார்கள். பெண்களுக்கு செய்யும் ஒரு சிறிய உதவி மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது எனது அனுபவமாகும். அதே நேரம் தங்கள் குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப்படும் அரசியல்வாதிகளால் இதை புரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார் .இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனாக ரூபாய் 8000 கோடியை பிரதமர் மோடி வழங்கினார் .
சுமார் 2000 கோடி மூலதன ஆதார் நிதியையும் வழங்கினார். மேலும் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக 'நமோ டிரோன்' மகளிர் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மகளிருக்கு டிரோன்களை வழங்கினார். அவற்றின் செயல்பாடுகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மத்திய அரசின் திட்ட பெண் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார் .அப்போது அவர்களின் பணியின் பல்வேறு அம்சங்களை கேட்டு அறிந்தவுடன் அவர்களின் கடின உழைப்பையும் உறுதியையும் பாராட்டினார்.
SOURCE :DAILY THANTHI