ராமராஜ்ஜியத்தின் தொலைநோக்கு பார்வை: இந்தியாவின் வளர்ச்சியில் மோடியின் மாஸ்டர் பிளான்
சாதி பிராந்தியத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுக்க வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

By : Karthiga
டெல்லியில் தசரா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- விஜயதசமி பண்டிகை என்பது ராவணனை ராமர் வெற்றி கொண்டதை குறிக்கிறது . அதுமட்டுமின்றி நாட்டில் நிலவும் தீமைகளை தேச பக்தி வென்ற நிகழ்வாக விஜயதசமி கொண்டாடப்பட வேண்டும். சமூக தீமைகளையும் பாகுபாட்டையும் ஒழிக்க நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு தீமையையும் கொளுத்த வேண்டும். சாதியின் பெயராலும் பிராந்தியத்தின் பெயராலும் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை மக்கள் வேரறுக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு ஏழை குடும்பத்துக்கு உதவுவது உட்பட 10 உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிப்படை வசதி இன்றி ஒரு ஏழைக் கூட இல்லாத நிலை வரும் வரை நாம் ஓயக்கூடாது. ஒவ்வொருவரும் வளர்ச்சி அடைந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமன்றி நம்பகமான ஜனநாயக நாடு ஆகும். நாம் நாடுகளை பிடிப்பதற்கு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை பாதுகாப்புக்கு தான் பயன்படுத்துகிறோம் .
அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானவை. ராமரின் சிந்தனைகளை கொண்ட இந்தியாவின் உருவாக்க வேண்டும். வளர்ந்த தற்சார்பு கொண்ட அனைவருக்கும் சம உரிமை அளிக்கக்கூடிய இந்தியாவை உருவாக்க வேண்டும். அதுதான் ராமராஜ்ஜியத்தின் தொலைநோக்கு பார்வை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படுவது நூற்றாண்டு காலமாக இந்தியர்கள் பொறுமையாக இருந்ததற்கு கிடைத்த வெற்றியின் அடையாளம். ராமர் கோவில் திறப்பதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. ராமர் விரைவில் வருவார்.
ராமர் கோவில் கட்டுமானத்தை பார்ப்பது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ராமர் கோவிலில் எழும்பும் தெய்வீக ஒலி உலகத்துக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை அளிக்கும். ராமர் கோவில் கட்டும் நேரத்தில் மகளிர் இட ஒதுக்கீடு புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு சந்திரயான்-3 திட்ட வெற்றி போன்ற நல்ல சகுனங்கள் தெரிகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI
