Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சர் எச்சரிக்கையை மதிக்காத ஆம்னி பேருந்துகள் - கட்டண கொள்ளையில் அவதிப்படும் மக்கள்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் பஸ் கட்டணம் தொடர்ந்து உயர்வு அரசின் எச்சரிக்கையையும் மீறி வசூல் செய்த ஆம்னி பஸ்கள்

அமைச்சர் எச்சரிக்கையை மதிக்காத ஆம்னி பேருந்துகள் - கட்டண கொள்ளையில் அவதிப்படும் மக்கள்

KarthigaBy : Karthiga

  |  16 Aug 2022 6:30 AM GMT

சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்பிய நிலையில் ஆம்னி பஸ்களின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து காணப்பட்டது. அரசின் எச்சரிக்கையையும் மீறி அடாவடி வசூல் தொடர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுதந்திர தினத்தையொட்டி சனி,ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தது.இதையடுத்து சென்னையில் பணிபுரியும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் கிடுகிடுவென கட்டணத்தை உயர்த்துவது வாடிக்கை.


அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ் கட்டணமும் தாறுமாறாக உயர்த்தப்பட்டு இருந்தது. இது தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களில் பயணிகள் கட்டணத்தை திருப்பி பெற்றுக் கொடுத்ததாக கூறப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நேற்று இரவு முதல் பலர் சென்னை திரும்பினார்.

எப்போதும் போல நேற்றும் சென்னை திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் உயர்ந்து காணப்பட்டது. உதாரணமாக திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரையிலிருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 500 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாகவும், திருச்சி ,கோவை, சேலம் ,ஓசூரில் இருந்து புறப்பட்ட பஸ்களின் கட்டணம் அதிக பட்சமாக 3 ஆயிரம் என்ற அளவில் இருந்ததாகவும் பயணிகள் குற்றம்சாட்டினர்.

சில பஸ்கள் மட்டும் வழக்கமான கட்டணத்தை நிர்ணயித்து இருந்தாலும் பெரும்பாலான பஸ்கள் சாதாரண நாட்களை விட அதிக கட்டணத்தை வசூலித்ததாக கூறப்படுகிறது.

அரசின் எச்சரிக்கையை மீறி அடாவடியாக அதிக கட்டண வசூல் தொடர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News