Kathir News
Begin typing your search above and press return to search.

ஆதித்ய வர்மா - செயற்கையானவன்! - கதிர் விமர்சனம் #KathirReview

ஆதித்ய வர்மா - செயற்கையானவன்! - கதிர் விமர்சனம் #KathirReview

ஆதித்ய வர்மா - செயற்கையானவன்! - கதிர் விமர்சனம் #KathirReview
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2019 1:41 PM GMT


சீயான் விக்ரம் அவர்களின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ஆதித்ய வர்மா. இது தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடித்து சக்கை போடு போட்ட அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் பதிப்பு தான்.


புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? நடிப்பில் அசத்தி இருக்கிறார் துருவ். தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாரோ அதே அளவுக்கு துருவும் நடித்திருக்கிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பு, முக பாவனைகள் என்று அனைத்திலும்
துருவ் சிறப்பாக செய்திருக்கிறார். இது தான் அவரின் முதல் படமா என்று வியக்க வைக்கிறார். வாழ்த்துகள் சீயான், உங்கள் மகன் சரியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் உங்களை விடவும் அதிகம் சாதிப்பார்.


துருவின் நடிப்பு எல்லாம் சரி தான், ஆனால் படம் எப்படி?


சில திரைப்படங்களை பார்க்கும் பொழுது, இப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா? இப்படிப்பட்ட பைத்தியங்களும் உலகத்தில் வாழ்கின்றனவா? என்ற கேள்வி நமக்குள் எழும். ஆதித்ய வர்மா அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான். இந்த திரைப்படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல. ஆயிரம் முறை பார்த்து பழக்கப்பட்ட அதே காதல், காதல் முறிவு, ஜாதி, அந்தஸ்து போன்ற விஷயங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட கதை தான்.


என்னதான் சினிமா கதாநாயகன் என்றாலும், துளி கூட நம்பும் படி இல்லாத காட்சிகள். எந்நேரமும் மது அருந்தி போதை மருந்து உட்கொண்டு போதையிலேயே மிதக்கிறார் நம் ஆதித்ய வர்மா(துருவ்). கோபமோ காதலோ அது எதுவானாலும் அவருக்கு எல்லை என்பதே இல்லை. இது போன்ற திரைப்படங்கள் இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.


கதையில் பெரிய சுவாரஸ்யம் இல்லை என்றாலும் திரைக்கதையாவது விறுவிறுப்பாக அமைத்திருக்கலாம். ஜவ்வு போல் மெல்ல நகரும் திரைக்கதை. ஒரு கட்டத்தில் இவர்கள் செய்யும் இம்சை, 'அட சாமி எப்போ தான் படம் முடியுமோ' என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.


கதாநாயகியாக பனிதா சந்து. இது போன்ற ஆணாதிக்கத்தை மிகைப்படுத்தும் திரைப்படங்களுக்கு ஏற்ற முகம். இவருக்கு அதிக வசனங்கள் கூட கிடையாது. உணர்ச்சிபூர்வமான காட்சிகளும் கிடையாது. இறுதியில் அவர் உணர்ச்சி பொங்க பேசும் காட்சியும் கூட பெரிதாக எடுபடவில்லை. கதாநாயகி என்றால் பொம்மை போல் இருக்க வேண்டும், கதாநாயகன் காதலை வெளிப்படுத்தியதும் சம்மதித்து விட வேண்டும்(இங்கே காதலை தெரிவிக்கும் காட்சி கூட இல்லை, ஏதோ ஒரு அடிமை போல நடத்தப்பட்டிருக்கிறார்). கதாநாயகன் சுதந்திரமாக பெண்கள் விடுதிக்குள் நுழையலாம், வகுப்பிலிருந்து அழைத்து செல்லலாம், கதாநாயகியை தன் அறைக்கு அழைத்து செல்லலாம், உடலுறவு வைத்து கொள்ளலாம் கல்லூரி நிர்வாகமோ இதை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாது. விடுதிக்கு வார்டன் என்று ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு நமது 'அமெரிக்கா மாப்பிள்ளை' புகழ் ராஜா தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். துருவின் தந்தையாக நன்றாகவே நடித்திருக்கிறார். இவர் தொடர்ந்து இது போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்தால் நன்றாக இருக்கும். குறிப்பிடும்படியான மற்ற கதாபாத்திரங்கள் என்றால் லீலா சாம்சன் மற்றும் துருவின் நண்பராக வரும் அன்பு.


பிரியா ஆனந்தும் படத்தில் நடித்திருக்கிறார். அவர் கதாபாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் படத்தின் நீளத்திலிருந்து ஒரு 20 நிமிடங்கள் குறைந்திருக்கும். அந்த அளவுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.


பிரியா ஆனந்த் ஆகட்டும் அல்லது பனிதா சிந்து ஆகட்டும் பெண்களை எந்த அளவு இழிவு படுத்த வேண்டுமோ அந்த அளவு இழிவு படுத்தி இருக்கின்றனர். இதற்கு நாம் இயக்குனர் கிரீசாயா அவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. இயக்குனர் சந்தீப் வாங்கா(அர்ஜுன் ரெட்டி இயக்குனர்) அவர்களின் கதையை தான் தமிழிலும் அப்படியே படமாக்கி இருக்கிறார்கள். இவ்வளவு வக்கிரமான படத்தில் தான் துருவ் அறிமுகமாக வேண்டுமா விக்ரம் சார்? பெண்கள் வெறும் போகப்பொருள் தானா? சினிமாக்காரர்களின் இந்த மனநிலை எப்போது தான் மாறுமோ?


நல்ல வேளை இந்த படத்தில் இருந்து இயக்குனர் பாலா நீக்கப்பட்டார். அவர் மட்டும் தொடர்ந்து இயக்கி இருந்தால், படம் என்றுமே வெளியாகி இருக்காது. "சார் பாலா மட்டும் எடுத்திருந்தா..." என்று ஏக்க பெருமூச்சு விடும் அளவிற்கு இது ஒன்றும் அவ்வளவு சிறப்பான கதை இல்லை. இந்த படத்தையும் வருடகணக்கில் எடுத்து தயாரிப்பாளரை காலி செய்திருப்பார். அந்த விதத்தில் தயாரிப்பாளர் தப்பித்தார்.


ராதன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை. ரவி கே சந்திரன் அவர்களின் ஒளிப்பதிவும் பிரமாதம். மற்றபடி இந்த திரைப்படத்தில் ரசிக்கும் படி ஒன்றும் இல்லை.


ஏகப்பட்ட ஆபாச காட்சிகள், அருவருப்பான வசனங்கள், சுவாரசியம் இல்லாத கதை, திரைக்கதை என்று அனைத்திலும் சொதப்பும் ஆதித்ய வர்மா தவிர்க்கப்பட வேண்டிய படம் தான்.


ஆதித்ய வர்மா - செயற்கையானவன்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News