மக்களவை தேர்தலுக்கு பின் தமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்! டெல்லி சென்ற ஜி.கே.வாசன் மோடியை சந்தித்து தகவல்.!
மக்களவை தேர்தலுக்கு பின் தமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்! டெல்லி சென்ற ஜி.கே.வாசன் மோடியை சந்தித்து தகவல்.!
By : Kathir Webdesk
தலைவர் ஜி.கே.வாசன் இன்று (நவ.6) பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்புக்குப் பின்னர் வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்று, நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் செல்கிறார். இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர் என்ற முறையில் அவரை நான் அவரது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசினேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.
தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சினைகள் குறித்தும் பிரதமரிடம் விரிவாக எடுத்துக் கூறினேன். கல்வி, விவசாயம், தொழில் வேலைவாய்ப்பு, தமிழ் வளர்ச்சிக்கான முக்கியத்துவம் ஆகியவை குறித்து எடுத்துக் கூறினேன். அதனை பிரதமர் பொறுமையாக கேட்டுக்கொண்டார். அவ்வப்போது என்னிடம் சந்தேகங்களைக் கேட்டார். அதற்கு நான் விளக்கம் அளித்தேன்.
குறிப்பாக அதிமுக ஆட்சியாளர்கள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய திட்டங்களையும், மத்திய அரசின் திட்டங்களையும் சிறப்பாக மக்களுக்குச் சென்று சேர்க்கிறார்கள் எனத் தெரிவித்தேன். தமிழகத்தின் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதனைப் பரிசீலனை செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன். தமிழக அரசியல் சூழல் குறித்தும் அவரிடம் சில கருத்துகளைச் சொன்னேன். என்னுடைய கணிப்பையும் அவரிடம் தெரிவித்தேன்.
மக்களவைத் தேர்தலின்போது தமிழக மக்களிடம் இருந்த எண்ண ஓட்டம் மாறியிருக்கிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல். மக்கள் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். வருங்காலத்தில் இந்த வெற்றி தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை பிரதமரிடம் தெரிவித்தேன். மத்திய - மாநில அரசுகள் மீதும் அதனைச் சார்ந்த கூட்டணி கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது". இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.