“சிவசேனாவுடன் கூட்டணி வைப்பது, காங்கிரசை அடக்கம் செய்வதற்கு சமம்” – காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் காட்டம்!
“சிவசேனாவுடன் கூட்டணி வைப்பது, காங்கிரசை அடக்கம் செய்வதற்கு சமம்” – காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் காட்டம்!
By : Kathir Webdesk
மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் அங்கு பாஜக – சிவசேனா கூட்டணி அரசு அமையும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. எடுத்த எடுப்பிலேயே தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வர் ஆக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும் 50 சதவீத அமைச்சர்களையும் சிவசேனாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்.
அனுபவம் எதும் இல்லாத 29 வயது ஆதித்ய தாக்கரேவை மிகப்பெரிய மாநிலமான மகராஷ்டிராவிற்கு முதல்வர் ஆக்குவதில் பாஜகவிற்கு உடன்பாடில்லை. மக்களும் இதை விரும்பவில்லை. மேலும் பாஜக வென்ற 105 இடங்களில், பாதி இடங்களை கைப்பற்றிய (56 இடங்கள்) சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதே அதிகம்தானே? இருந்தாலும், இதையும் தாண்டி சிவசேனாவிற்கு துணை முதல்வர் பதவி கொடுக்க பாஜக முன்வந்தது.
ஆனால் தன் மகனை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தே தீரவேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே விடாபிடியாக இருக்கிறார்.. இதுதான் அவரது தந்தை பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவுக்கு பால் ஊற்றப்போகிறது என்பதை அவர் யோசிக்க வில்லை. பதவி வெறி அவரை தங்களின்பரம எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்க்க வைத்தது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆசைக்காட்டினார். காங்கிரசும் தூபம் போட்டது. இவர்களின் ஆதரவுடன் மகனை அரியணை ஏற்றியே தீருவது என்று பாஜகவுடனான 35 கால கொள்கை கூட்டணியை புதைத்தார் உத்தவ் தாக்கரே.
சிவசேனாவின் 56 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரசின் 54 எம்எல்ஏக்களும், காங்கிரசின் 44 எம்எல்ஏக்களும் சேர்ந்து மொத்தம் 154 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால், பாலகனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிடலாம் என்று மனப்பால் குடித்து வருகிறார், உத்தவ் தாக்கரே. சரத்பவாரின் பேச்சைக் கேட்டு நரேந்திர மோடி அரசில் அங்கம் வகித்த சிவசேனாவின் மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்தை ராஜினாமா செய்ய வைத்தார் உத்தவ் தாக்கரே.
வாரங்கள் பல கடந்த நிலையில் சிவசேனா ஆட்சி அமைக்க சரத்பவாரும், சோனியாவும் இன்னமும் ஆதரவு அளிக்கவில்லை. ஆலோசனைக்கு மேல் ஆலோசனைதான் நடத்தி வருகின்றனர். சோனியாவின் முடிவை பொறுத்துதான், சிவசேனாவின் ஆட்சி அமையுமா என்பது தெரியவரும்.
இதற்கிடையே, விரைவில் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து சோனியா அறிவிப்பார் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புடன் சிவசேனா, நாட்களை நகர்த்துகிறது.
சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரசுக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் மராட்டியத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுக்கும் காங்கிரசுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர், சஞ்சய் நிருபம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தது. அதன் விளைவாக காங்கிரஸ் அந்த மாநிலத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இன்றுவரை அதிலிருந்து காங்கிரசால் மீள முடியவில்லை. அது காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு ஆகும்.
இதேநிலைதான் மராட்டியத்திலும் காங்கிரசுக்கு ஏற்படும். சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது, காங்கிரசை அடக்கம் செய்வதற்கு சமம். சிவசேனா தலைமையிலான அரசின் காங்கிரசுக்கு 3-வது இடம்தான் கிடைக்கும். இது காங்கிரசை புகைப்பதற்கு சமம். எனவே சோனியா காந்தி, எந்த காரத்தை கொண்டும், சிவசேனாவுடன் கூட்டணி வைக்க ஒத்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு சஞ்சய் நிருபம் தெரிவித்தார்.