ரெயிலில் நாய்களைக் கொண்டு செல்ல அனுமதி- விதிமுறைகள் அறிவிப்பு
ரயில்களில் நாய்களை தங்களுடன் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல விதிமுறைகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

By : Karthiga
பொதுமக்களின் நீண்ட தூர பயணத்துக்கு ரயில் சேவை எப்போதும் விருப்பமான ஒரு போக்குவரத்தாக இருந்து வருகிறது.தற்போது பயணிகளில் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை ரயிலில் எடுத்துச் செல்வதற்கு உள்ள வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி நாய்களை ரயிலில் ஏற்றிச் செல்ல விரும்பும் பயணிகளுக்கான ரயில் விதிமுறைகள் பின்வருமாறு:-
நாய்களை தங்களுடன் எடுத்துச் செல்ல விரும்பும் ரயில் பயணிகள் ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி பெட்டி , முதல் வகுப்பு இரண்டு படுக்கை வசதி கொண்ட கூபே அல்லது நான்கு படுக்கை வசதி கொண்ட கேபின் போன்றவற்றில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மட்டுமே பயணிகள் செல்லப்பிராணியுடன் பயணிக்க முடியும். இதை தவிர்த்து மற்ற எந்த வகை பெட்டிகளிலும் நாய்களை உடன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.ரயில் பெட்டியில் பயனுடன் தங்கி இருக்கும் நாய்க்கு சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அது கார்டு வேனுக்கு மாற்றப்படும். முறையான முன்பதிவு இல்லாமல் நாய்களை ஏற்றிச் சென்றால் அதன் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். நாய்க்குட்டிகளை பொறுத்தவரையில் அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் கூடைகளில் வைத்துக்கொண்டு செல்லலாம். ஆனால் அவற்றை பாதுகாப்பாக எடுத்துச் செல்வது என்பது பயணியின் பொறுப்பாகும். அதை தவிர பயணிகள் லக்கேஜ் - கம் - பிரேக் வேனில் கிடைக்கும் நாய் பெட்டியில் வைத்து தங்களது நாய்களை கொண்டு செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு நாய் பெட்டியில் ஒரு நேரத்தில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்கப்படும். குறைந்தது ரயில் புறப்படும் மூன்று மணி நேரத்துக்கு முன்பு பார்சல் அலுவலகத்திற்கு நாயை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும் .ஒரே ஒரு நாய் மட்டுமே எடுத்துச் செல்ல ஒரு பயணிக்கு அனுமதி வழங்கப்படும். முன்பதிவு செய்யும்போது நாய் எந்த விதமான தொற்று நோய்களாலும் பாதிக்கப்படவில்லை என கால்நடை டாக்டரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
