Kathir News
Begin typing your search above and press return to search.

தொழிற்சாலைகளில் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? அறிக்கை வேண்டி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

எந்தெந்த மதுபான தொழிற்சாலைகளில் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? அறிக்கை வேண்டி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

KarthigaBy : Karthiga

  |  28 Dec 2022 11:30 AM GMT

சென்னை ஐகோர்ட்டில் கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் டாஸ்மாக்கில் மதுபான விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம், ஊழியர்களின் ஊதியம் , கடை வாடகை, மது தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு மதுபானங்கள் வாங்கப்படுகின்றன? என்ன விலைக்கு வாங்கி என்ன விலைக்கு விற்கப்படுகின்றன? உள்ளிட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விளக்கம் கேட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்தார். மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ஊழியர்கள் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம் மூன்றாம் நபரின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக்கூறி என்னென்ன நிறுவனங்களிடம் எவ்வளவு விலைக்கும் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வழங்க மறுத்துவிட்டது.


எனவே அந்த விவரங்களை தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் இந்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்பதற்கு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்பதை கண்டறிய மதுபானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக மதுபான தொழிற்சாலைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் நகல்களை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதை அடுத்து ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரூபாய் 10,000 வழக்குச் செலவு விதித்த நீதிபதி அத்தொகையை அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு செலுத்த உத்தரவிட்டார்.


மேலும் எந்தெந்த மதுபான தொழிற்சாலைகளிடம் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன ?அது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்த நகல்கள் உள்ளிட்ட விவரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் வருகிற ஜனவரி 6ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News