₹20 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்லடம் கரிவரதராஜ பெருமாள் கோவில் நிலத்துக்கு போலி பட்டா பெற முயற்சி!
கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள கிராமங்களான காளிவேலம்பட்டியில் 3.5 ஏக்கர் நிலமும் சுக்கம்பாளையத்தில் 6.5 ஏக்கர் நிலமும் சொந்தமாக உள்ளது.

By : Shiva V
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ₹20 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கு தனிநபர்கள் சிலர் பட்டா பெற முயன்றதை பக்தர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் 400 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான கோவில் என்பதால் கோவில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள கிராமங்களான காளிவேலம்பட்டியில் 3.5 ஏக்கர் நிலமும் சுக்கம்பாளையத்தில் 6.5 ஏக்கர் நிலமும் சொந்தமாக உள்ளது.
இவை இந்த கோவிலுக்கான சொத்துதான் என்பதற்கான முதன்மை ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதாகவும் இனாமாக வழங்கப்பட்ட கோவில் நிலத்திற்கான சிட்டாவில் சிலர் தங்களின் பெயரை இணைத்து பட்டா பெற முயற்சி செய்கின்றனர் என்றும் அப்பகுதி பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆக்கிரமிக்க முயற்சிக்கும் இந்த கோவிலின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ₹20 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் கோவில் நிலத்தில் வேலி அமைத்ததுடன் மின் இணைப்பும் பெற்றுள்ளனர். இது குறித்து அனைத்து துறைகளுக்கும் புகார் அளித்த பிறகு கோவில் நிலத்திற்கு பட்டா வழங்கக்கூடாது என்று வருவாய் துறைக்கு இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து மின்னிணைப்பு கொடுக்கப்பட்ட கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் கோவிலுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் தொடர்பான விவரங்களை வருவாய் துறை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் இதனால் கோவில் சொத்துக்கள் தொடர்பான முழு விவரங்களை தங்களால் சேகரிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணங செயல்பட்டால் மட்டுமே இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த முடியும் என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது.
