Kathir News
Begin typing your search above and press return to search.

முத்துப்பேட்டையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - மூன்று பேர் கைது !

முத்துப்பேட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த க்யூ ப்ரான்ச் போலீசார் இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர்.

முத்துப்பேட்டையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - மூன்று பேர் கைது !

KarthigaBy : Karthiga

  |  7 Jun 2023 1:15 PM GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்தி காடு வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தஞ்சை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கர் தலைமையில் நாகை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திர பூபதி திருவாரூர் சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் ஆகியோர் அடங்கிய போலீசார் படகு மூலம் சென்று முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அங்குள்ள லகூன் திட்டு பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் படகுடன் இருப்பதை கண்டு போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த படகில் 10 மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது . இதனை அடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் மகேந்திரன் , கோவிலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் சசிகுமார், ஆகியோர் என்பதும் இவர்கள் 3 பேரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிய வந்தது.


இதனை அடுத்து பிடிபட்டவர்களிடம் இருந்து 300 கிலோ கஞ்சா, 35 குளியல் சோப்புகள் ஒரு ஜி.பி.ஆர்.எஸ் கருவி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு ஆகியவற்றை கியூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர் . பின்னர் பிடிபட்ட மூன்று பேரையும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் இதர பொருள்களையும் முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


இதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 300 கிலோ கஞ்சாவின் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 10 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இந்த கடத்தல் சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News