அயோத்தி ராமர் கோவில் நினைவு தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோவில் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
By : Karthiga
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பாலராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அயோத்தி ராமர் கோவில் நினைவாக தபால் தலைகளை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். இதில் ராமர் கோவில் சூரியன், சரயு நதி, கோவில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கிய தபால் தலைகளை அவர் அறிமுகப்படுத்தினார். மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் கர்நாடகா, கம்போடியா உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளால் வெளியிடப்பட்ட தபால் தலைகளின் தொகுப்புகள் அடங்கிய 48 பக்கங்கள் கொண்ட புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார் .
பின்னர் அவர் பேசுகையில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் ராமர் தொடர்பான தபால் தலைகள் மற்றும் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட தபால் தலைகளின் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ராமர் பக்தர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் முத்திரைகள் வெறும் காகிதம் அல்லது கலைப்படைப்பு அல்ல அவை காவியங்கள் மற்றும் சிறந்த யோசனைகளின் வடிவம். ராமாயணம் அன்பின் வெற்றி செய்தியை அளிக்கிறது. மனித நேயத்தை இணைக்கும் அதே வேளையில் மக்களுக்கு தியாகம், ஒற்றுமை மற்றும் துணிச்சலை கற்பிக்கிறது என்று கூறியுள்ளார்.
SOURCE :DAILY THANTHI